எல்லோருக்கும் உறவுகள் இனிக்க வேண்டும் என்பதுதான் ஆசை. சில நேரங்களில் அந்த ஆசை பேராசையாகத் தோன்றும் அளவிற்கு, உறவுகளில் இன்பமும் அமைதியும் போதாமல் போகின்றன. ஆனால் உண்மையில், உறவுகள் என்பது கணவன்-மனைவி இடையே மட்டுமல்லாமல், பெற்றோர், குழந்தைகள், சொந்தங்கள், நண்பர்கள், அக்கம்-பக்கத்தார் என வாழ்க்கையின் ஒவ்வொரு தளத்திலும் பரவியிருக்கும் உயிர்நாடி போன்றவை. இந்த உறவுகள் அனைத்தும் நல்ல புரிதல், ஒருவருக்கொருவர் ஆதரவு, நேர்மறையான மனநிலை ஆகியவற்றின் அடிப்படையில்தான் வளர முடியும்.
உறவுகளுக்குள் மரியாதை மிகவும் அவசியம். “இவர் என் அப்பாதான், என்ன செய்தாலும் பரவாயில்லை” என்று நினைத்து மரியாதையின்றி பேசுவது அவரது மனதைப் புண்படுத்தும். அதேபோல், “இவர்கள் என் பிள்ளைகள்தான், எதையும் நினைக்கமாட்டார்கள்” என்று குறை சொல்லவோ, அவர்களை மட்டம் தட்டவோ கூடாது. உறவு என்பது அருகில் இருப்பதால் மரியாதை குறையக் கூடிய இடம் அல்ல – மாறாக, அதுவே மரியாதைக்கு மிகவும் தகுதியான இடம்.
உறவுகளைப் பராமரிக்க திறந்த மனமும், வெளிப்படையான உரையாடலும் அவசியம். முக்கியமான முடிவுகளை எடுக்கும்போது, குடும்பத்தினரின் – குறிப்பாக கணவன்-மனைவி, பிள்ளைகளின் – கருத்தைக் கேட்பது சுமுகமான உறவை வளர்ப்பதற்கு உதவும். குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவது உறவுகளை வலுப்படுத்தும் மிகச் சிறந்த வழியாகும். நண்பர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது தவறல்ல; ஆனால், வீட்டில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்வதும், அவர்கள் எதை எதிர்பார்க்கிறார்கள் என்பதை உணர்வதும் மிகவும் அவசியம்.
உறவுகள் வளர பொறுமை தேவை. சில நேரங்களில் உறவுகளுக்கிடையே இடைவெளி ஏற்படலாம். அப்போது, பிரச்சினையின் வேரை ஆராய்ந்து, சுமுகமான தீர்வைத் தேட வேண்டும். மேலும், உறவுகளில் சந்தேகம் விதைக்கப்பட்டால், அது விரிசலாக மாறும். எனவே, சந்தேகம் ஏற்பட்டவுடன் அதை மறைக்காமல், வெளிப்படையாக உரையாடி, தெளிவு பெற வேண்டும். தவறு செய்திருந்தால் மன்னிப்பு கேட்கத் தயங்கக்கூடாது; பிறர் தவறு செய்திருந்தால் மன்னிக்கத் தெரிந்துகொள்ள வேண்டும். இதுவே உறவுகளை இனிமையாக வைத்திருக்கும் ரகசியம்.
மற்றவர்களின் தவறுகளைப் பெரிதாக்கி, கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுக்கொண்டு சுற்றத்தையே கசக்கும் பழக்கத்தை உடனே தவிர்க்க வேண்டும். பதிலாக, நேர்மறையாக சிந்தித்தலும், மற்றவர்களை நேர்மறையாக பார்த்தலும் உறவுகளை உயிர்ப்புடன் வைத்திருக்கும்.
உறவுகள் நமது தேவைகளை நிறைவேற்றுவதற்காக ஏற்பட்டிருந்தாலும், அந்த உறவுகளின் தேவைகளை நாமும் பூர்த்தி செய்ய வேண்டிய கடமை உண்டு. எனவே, மகிழ்ச்சியான மனநிலையுடன், புரிதலோடும் பொறுமையோடும் உறவுகளைக் கையாள்கையில், அவை கசக்காமல் இனிக்கும் கரும்பாகவே தொடரும்.
சமூகத்தில் நாம் ஒருவரையொருவர் சார்ந்துதான் வாழ்கிறோம். நமது மகிழ்ச்சியும், ஆனந்தமும் சுற்றத்தில் பரவும்போது, நம்மைச் சுற்றியுள்ள உறவுகளும் இயற்கையாகவே இனித்துவம் அடையும். உறவுகளை இனிமையாக வைத்துக்கொள்வதும், அவற்றைச் சிக்கலாக்கிக் கொள்வதும் – இரண்டுமே நம் கையில்தான் உள்ளது.








