காலையில் படுக்கையில் இருந்தபடியே மொபைல் பார்த்தால் என்ன நடக்கும்? ஆய்வில் வெளியான தகவல்

மொபைல்

காலையில் கண் விழித்தவுடன் படுக்கையிலிருந்தபடியே மொபைலைத் தேடுவது இன்றைய பலரின் அன்றாடப் பழக்கமாக மாறியுள்ளது. பலர் கண் திறந்ததும் கைகள் தானாக மொபைலை நோக்கிச் செல்கின்றன. இதன் விளைவாக, படுக்கையிலேயே அரை மணி நேரத்திற்கும் மேலாக ஸ்கிரோல் செய்தபடி கழிப்பது வழக்கமாகியுள்ளது. ஒரு ஆய்வின்படி, ஸ்மார்ட்போனை அதிகம் பயன்படுத்தும் 80% பேர் காலையில் குறைந்தபட்சம் 15 நிமிடங்களாவது மொபைலைப் பார்த்தபடி படுக்கையிலேயே செலவிடுகின்றனர்.

ஆனால் இந்தப் பழக்கம் மனதிற்கும் உடலுக்கும் நல்லதல்ல என்கின்றனர் நிபுணர்கள். காலையில் முதல் செயலாக மொபைலில் ரீல்ஸ், யூ-டியூப் வீடியோக்கள், வாட்ஸ்அப் செய்திகள் என எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் பார்க்க ஆரம்பித்தால், அந்த நாள் முழுவதும் மனதில் ஒரு பதற்றமும் கவனச்சிதறலும் தொடர்ந்து நிலைத்திருக்கும். குறிப்பாக, மொபைலில் பெறப்படும் அதிர்ச்சி செய்திகளும், எண்ணற்ற நோட்டிஃபிகேஷன்களும் காலையிலேயே மன அழுத்தத்தை உருவாக்கி, பரபரப்பான மனநிலையை ஏற்படுத்துகின்றன.

மேலும், இரவு தூங்குவதற்கு முன்பு மொபைல் பார்ப்பதும், காலையில் எழுந்தவுடன் மொபைல் பார்ப்பதும் ஒரே விதமான பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றன. இரண்டு நேரங்களுமே உடலுக்கும் மூளைக்கும் ஓய்வு தேவைப்படும் நேரங்கள். அந்த நேரத்தில் மொபைலிலிருந்து வெளிப்படும் ப்ளூ லைட், தூக்கத்திற்கு உதவும் மெலடோனின் ஹார்மோனை இயற்கையாகவே குறைத்துவிடுகிறது. இது கண்களுக்கு சோர்வையும், காலையில் அயர்ச்சியான விழிப்பையும், தலைவலியையும் ஏற்படுத்துகிறது. மேலும், தூக்கம் ஆழமின்றி நிம்மதியற்றதாக மாறுகிறது.

காலையில் படுக்கையில் இருந்தபடியே மொபைல் பார்த்தால் என்ன நடக்கும்

காலை முதல் பல செய்திகள், மெசேஜ்கள், நோட்டிஃபிகேஷன்களை ஒரே நேரத்தில் பார்க்கும்போது, மனம் உடனடியாக உற்சாகத்திலிருந்து பதற்றத்துக்குத் தள்ளப்படுகிறது. இதன் விளைவாக, அடுத்தடுத்த செயல்களில் கவனம் சிதறி, நாள் முழுவதும் ஒரு வகையான மன அமைதியின்மை நிலவுகிறது.

இது மட்டுமல்ல, பணிக்குச் செல்லும் நேரமும் தாமதமாகிவிடுகிறது. மொபைலில் செலவிடப்படும் அந்த அரை மணி நேரத்தை, உடல் அசைவுகளுக்காகச் செலவிட்டால், காலையிலேயே உற்சாகமும் துடிப்பும் உண்டாகும். படுக்கையிலிருந்து எழுந்து சில நிமிடங்கள் ஸ்ட்ரெட்ச் செய்வது, மூச்சுப் பயிற்சி செய்வது போன்றவை மனதை அமைதியாகவும், உடலை உற்சாகமாகவும் மாற்றும்.

எனவே, காலையில் கண் விழித்தவுடன் மொபைலைத் தொடுவதற்குப் பதிலாக, சிறிது நேரம் அமைதியாக எழுந்து, உடலுக்கு ஓர் ஆரோக்கியமான தொடக்கம் கொடுங்கள். இந்த ஒரு மாற்றமே, உங்கள் நாளை மட்டுமல்ல, உங்கள் வாழ்வையே அமைதியாகவும் ஆரோக்கியமாகவும் மாற்றும். நம்ப முடியவில்லை என்றால், இரண்டொரு நாட்கள் மொபைல் இல்லாமல் காலையைத் தொடங்கிப் பாருங்கள். கிடைக்கும் அந்த அமைதியும், மன நிம்மதியும் உங்களை அடுத்த நாளும் இந்தப் பழக்கத்தைத் தொடர வைக்கும்!

 

© 2026 Colombo Tamil | All rights reserved | Made With By WebpressHub.net