வரலாற்று சாதனை: கட்டாய ராணுவ பயிற்சியில் இணைந்த முதல் டென்மார்க் இளவரசி

டென்மார்க் இளவரசி

டென்மார்க் அரச குடும்பத்தில் பாரம்பரியமாக இராணுவ சேவை மதிக்கப்பட்டு வந்தாலும், பெண் உறுப்பினர் ஒருவர் கட்டாய இராணுவப் பயிற்சியில் இணைவது என்பது இதுவரை நடந்திராத விஷயம். அந்த வரலாற்று சாதனையை தற்போது நிகழ்த்தியுள்ளார் டென்மார்க் இளவரசி இசபெல்லா.

மன்னர் பிரெடெரிக் X மற்றும் ராணி மேரி தம்பதியின் 19 வயது மூத்த மகளான இசபெல்லா, சமீபத்தில் உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு, கோடைக்கால விடுமுறைக்குப் பின்னர் நேரடியாக இராணுவ முகாமுக்கு வந்து சேர்ந்துள்ளார். ஆகஸ்ட் 3 ஆம் தேதி, ஸ்லாகல்ஸ் நகரில் உள்ள ஆண்ட்வோர்ஸ்கோவ் பீரங்கி படைத் தளத்தில் (Antvorskov Barracks) கார்ட் ஹுசார் ரெஜிமென்ட்டில் (Guard Hussar Regiment) பணியில் சேர்ந்து தனது 11 மாத இராணுவப் பயிற்சியைத் தொடங்கியுள்ளார்.

டென்மார்க் 2024-ஆம் ஆண்டில் பெண்களுக்கும் கட்டாய இராணுவ சேவையை அறிமுகப்படுத்தியது. மேலும், சேவைக் காலத்தை நான்கு மாதங்களிலிருந்து 11 மாதங்களாக உயர்த்தியது. இந்த விரிவாக்கப்பட்ட திட்டத்தின் கீழ் பணியாற்றும் முதல் குழுவில் இளவரசி இசபெல்லாவும் இடம்பெற்றுள்ளார். இதன் மூலம், டென்மார்க் அரச குடும்பத்தில் முழுமையான கட்டாய இராணுவ சேவைக்கு உட்படும் முதல் பெண்மணி என்ற பெருமையை இசபெல்லா பெறுகிறார்.

இசபெல்லாவின் மூத்த சகோதரரும், பட்டத்து இளவரசருமான கிறிஸ்டியன், இதே முகாமில் தனது இராணுவ பயிற்சியை நிறைவு செய்து, தற்போது இரண்டாம் லெப்டினன்ட்டாகப் பயிற்சி பெற்று வருகிறார். இளவரசி இசபெல்லா தனது சகோதரரின் பாதையைப் பின்பற்றி அதே ரெஜிமென்ட்டில் இணைந்துள்ளார்.

மற்ற வீரர்களைப் போலல்லாமல், இளவரசி இசபெல்லா தனது இராணுவ சேவைக்கான ஊதியத்தையும் தினசரி கொடுப்பனவுகளையும் முற்றிலுமாக நிராகரித்துள்ளார். கட்டாய வீரர்களுக்கு மாதாந்திர சம்பளம் மற்றும் வரி விலக்கு கொடுப்பனவுகள் கிடைக்கும் நிலையில், இசபெல்லா தனது பெற்றோரின் ஆதரவில் இந்த சேவையை மேற்கொள்ள உறுதிபூண்டுள்ளார். மேலும், சுமார் 1,600 இளம் வீரர்கள் இந்த வாரம் புதிய விரிவாக்கப்பட்ட பயிற்சியைத் தொடங்கியுள்ளனர்.

ஐரோப்பாவில் அதிகரித்து வரும் பாதுகாப்பு கவலைகள், உக்ரைன் போர் மற்றும் ஆர்க்டிக் பகுதியில் ஏற்பட்டுள்ள பதற்றங்கள் காரணமாக டென்மார்க் தனது இராணுவத்தை வலுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்த சூழலிலேயே இளவரசி இசபெல்லாவின் இராணுவ சேவையும் அமைந்துள்ளது.

© 2026 Colombo Tamil | All rights reserved | Made With By WebpressHub.net