உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் பெற்ற தாயே தனது 15 வயது மகளை ரூ.1.5 லட்சத்திற்கு விற்பனை செய்த அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. டேராடூனில் உள்ள சகஸ்தரதார ரோட்டைச் சேர்ந்த 35 வயதுடைய பெண் ஒருவர், கடந்த மாதம் தனது 15 வயது மகளை காணவில்லை என்று ராஜ்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில், பாரதிய நியாய சங்கிதா (BNS) பிரிவு 137(2)-ன் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, தீவிர விசாரணையைத் தொடங்கினர்.
ஆனால், விசாரணை முன்னேறிச் சென்ற வேளையில், உண்மை நிலை அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பெற்ற தாயே தன்னுடைய மகளை 1.5 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார் என்பது காவல்துறையின் விசாரணையில் கண்டறியப்பட்டது. மேலும் அதிர்ச்சியளிக்கும் வகையில், சிறுமியை வாங்கியவரிடம் முழு தொகையையும் பெற்று முடிக்காததால், மகளைக் காணவில்லை என்று பொய்யான புகாரையும் அந்தத் தாய் அளித்துள்ளார். இது போலீஸ் விசாரணையில் தெரியவந்ததையடுத்து, காவல்துறையினர் உடனடியாக அந்தத் தாயை கைது செய்தனர்.
இந்த வழக்கில் காவல்துறையினர் மேற்கொண்ட தொடர் நடவடிக்கையில், உத்தர பிரதேச மாநிலம் முசாபர்நகரில் இருந்து சிறுமி பத்திரமாக மீட்கப்பட்டார். இந்த நிலையில், இச்சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிறுமியை வாங்கியதாகக் கூறப்படும் மனிஷ் (37), மற்றும் லிவி குமார் (24) ஆகியோரும், இந்த பரிவர்த்தனைக்கு இடைத்தரகராக செயல்பட்ட பின்கி மாலிக் என்பவரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விசாரணையில் மேலும் தெரியவந்துள்ளதாவது, இந்த சிறுமியை கட்டாயத் திருமணம் செய்து வைக்கும் நோக்கத்திலேயே கடத்தப்பட்டுள்ளது. இந்த அதிர்ச்சி சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சிறுமி பாதுகாப்பாக மீட்கப்பட்டு, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக காவல்துறையினர் தயாராகி வருகின்றனர். குழந்தைத் திருமணம் மற்றும் கடத்தல் தொடர்பான சட்டங்களின் கீழ் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகள்




