பிரித்தானியாவில் காணாமல் போன 13 வயது சிறுமி: புதிய சிசிடிவி காட்சிகளை வெளியிட்டு தேடும் பொலிஸார்

பிரித்தானியாவில் காணாமல் போன 13 வயது சிறுமி

பிரித்தானியாவின் போல்டன் பகுதியைச் சேர்ந்த லில்லியா என்ற 13 வயது சிறுமி காணாமல் போய் ஒரு வாரம் கடந்துள்ள நிலையில், அவரைக் கண்டுபிடிப்பதற்காக கிரேட்டர் மான்செஸ்டர் பொலிஸார் புதிய சிசிடிவி காட்சிகளை வெளியிட்டுள்ளனர்.

கடந்த செப்டம்பர் 11ஆம் திகதி வெள்ளிக்கிழமை வீட்டில் இருந்து வெளியேறிய சிறுமி, அதன் பின்னர் வீடு திரும்பவில்லை.

பல மணி நேர தீவிர சிசிடிவி பதிவுகளின் ஆய்வுக்குப் பின்னர், செப்டம்பர் 14ஆம் திகதி காலை 10.36 மணியளவில் சிறுமி மான்செஸ்டர் பிக்காடில்லி பேருந்து நிலையத்தில் நின்றிருந்ததை பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.

அங்கிருந்து சால்போர்ட் நகர் நோக்கிச் சென்ற 36ஆம் இலக்கப் பேருந்தில் ஏறிய சிறுமி லில்லியா, பின்னர் அப்பேருந்தில் இருந்து கீழே இறங்கியதும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

வெளியிடப்பட்டுள்ள புதிய காட்சிகளில், சிறுமி கறுப்பு நிற ஆடை மற்றும் தலையில் ஹூடி அணிந்தவாறு முதுகுப்பையுடன் காணப்படுகிறார். பேருந்தில் இருந்து இறங்கிய பின்னர் அவர் எந்தத் திசையில் சென்றார் என்பது குறித்தோ அல்லது அவரைப் பற்றிய வேறு ஏதேனும் விபரங்கள் தெரிந்தாலோ உடனடியாகத் தங்களைத் தொடர்புகொள்ளுமாறு பொதுமக்களிடம் கிரேட்டர் மான்செஸ்டர் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement