கனடாவின் மதுபானங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் இறக்குமதிக்கு டொனால்ட் ட்ரம்ப் அதிரடித் தடை

ட்ரம்ப் அதிரடித் தடை

கனடாவில் இருந்து அமெரிக்காவிற்குள் இறக்குமதி செய்யப்படும் மதுபானங்கள், மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட பல பொருட்களுக்கு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 29 ஆம் திகதி முதல் முழுமையான தடை விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

அமெரிக்கப் பொருட்களுக்கு எதிராக கனடா அண்மையில் விதித்த பதில் தீர்வைகளுக்குப் பதிலடியாகவே இந்த கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அமெரிக்கா மற்றும் கனடா இடையே வர்த்தகப் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாய்க்கிழமை இரவு ஐந்து பிரகடனங்களில் கையெழுத்திட்டுள்ளார்.

இந்த உத்தரவின்படி கனடாவின் மதுபானங்கள், மோட்டார் சைக்கிள்கள், பால்மோர் பொருட்கள் மற்றும் வெல்லப்பாகு ஆகியவற்றை இறக்குமதி செய்வதற்கு முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், அடுத்த வாரம் முதல் பால் பொருட்கள், மரப் பொருட்கள், காகிதம், அலுமினியம், தளபாடங்கள் மற்றும் மெத்தைகள் உள்ளிட்ட பொருட்களுக்கு 50 சதவீத கூடுதல் தீர்வை விதிக்கப்படவுள்ளது.

அதேவேளை, உப்பு, கழிவறைத் தாள்கள், ஈயம் மற்றும் மீன்பிடி தூண்டில்கள் உள்ளிட்ட சில பொருட்களுக்கான தீர்வைகள் நீக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவின் சில மாகாணங்கள் தங்களது அரச மதுபானக் கடைகளில் அமெரிக்க மதுபானங்களின் விற்பனையைத் தடை செய்துள்ளதாலேயே, வழக்கமான தீர்வைகளுக்குப் பதிலாக அமெரிக்கா முழுமையான இறக்குமதி தடையை விதிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டதாக வெள்ளை மாளிகையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க உற்பத்தியைப் பாதுகாக்கவும், அமெரிக்கா மீது வர்த்தக ரீதியான பதிலடி நடவடிக்கைகளை எடுக்கும் நாடுகளுக்கு எதிராக சமமான வர்த்தக சூழலை உருவாக்கவுமே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் பல பில்லியன் டொலர் பெறுமதியான கனடிய பொருட்கள் பாதிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், அமெரிக்க மத்திய அரச கொள்வனவு வேலைத்திட்டங்களில் இருந்து கனடிய தயாரிப்புகளை நீக்குமாறு அந்நாட்டின் பொது சேவைகள் நிர்வாகத்திற்கு டொனால்ட் ட்ரம்ப் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளார்.

அமெரிக்காவின் இந்த கடுமையான நிலைப்பாடு குறித்து கருத்து வெளியிட்டுள்ள கனடா-அமெரிக்க வர்த்தக அமைச்சர் டொமினிக் லெப்லாங்க், அமெரிக்காவின் இத்தகைய நியாயமற்ற நடவடிக்கைகளில் இருந்து கனடிய தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் வர்த்தகர்களைப் பாதுகாப்பதே அரசாங்கத்தின் முதன்மையான நோக்கம் என்று தெரிவித்துள்ளார்.

கனடாவின் இறைமையை மதிக்கும் வகையில் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா முன்வரும் பட்சத்தில், தாம் நேர்மையுடன் செயல்படத் தயாராக உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, அமெரிக்காவை முழுமையாகச் சார்ந்திருக்கும் நிலையை மாற்றி ஏனைய சர்வதேச நாடுகளுடன் புதிய வர்த்தக உடன்படிக்கைகளை மேற்கொள்வதற்கு கனடா திட்டமிட்டுள்ளதாக கனடிய பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் ஸ்தம்பிதமடைந்ததை அடுத்து, நாட்டின் பொருளாதார சுதந்திரத்தைப் பாதுகாக்கும் நோக்கில் புதிய வழிகளில் நகர்வது சில சவால்களை ஏற்படுத்தினாலும், சும்மா இருப்பதனால் ஏற்படும் இழப்பை விட இந்த மாற்றத்தை முன்னெடுப்பதே சிறந்தது எனவும் பிரதமர் கார்னி வலியுறுத்தியுள்ளார்.

Advertisement
Written by

இணையதளச் செய்திப் பிரிவு

சிறப்புச் செய்திகள் யாவும் இணையதள செய்திப் பிரிவு என்ற பெயரில் இணையதள ஆசிரிய குழுவினரால் பதிவேற்றப்படுகின்றன.