கனடாவின் சாஸ்கடூன் பகுதியில் உடைந்த கணுக்காலுக்கு உரிய நேரத்தில் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படாமல் வைத்தியசாலையிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட 30 வயதுடைய கிறிஸ்டன் ஹான்கே என்ற இளம் பெண் உயிரிழந்த சம்பவம் அந்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் முறையான மற்றும் சுயாதீனமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினரும் எதிர்க்கட்சியினரும் வலியுறுத்தியுள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி தனது வீட்டின் படிக்கட்டுகளில் கால் நழுவி விழுந்ததில் கிறிஸ்டன் ஹான்கேயின் கணுக்கால் மூன்று இடங்களில் முறிவடைந்தது. இதையடுத்து அவர் ரோயல் பல்கலைக்கழக வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போதிலும், மூன்று நாட்களுக்குப் பின்னர் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படும் என்று கூறி வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
எனினும், நிர்ணயிக்கப்பட்ட நாளில் சத்திரசிகிச்சைக்காக அவர் மீண்டும் வைத்தியசாலைக்குச் சென்றபோது, அவரது சத்திரசிகிச்சைக்கான எந்தவொரு பதிவுகளும் அங்கு இருக்கவில்லை எனக் கூறி வைத்தியசாலை நிர்வாகம் அவரை மீண்டும் வீட்டுக்கு அனுப்பியுள்ளது.
புதிய சத்திரசிகிச்சை திகதிக்காக வீட்டில் காத்திருந்த நிலையில், ஆகஸ்ட் மாதம் 19 ஆம் திகதி கிறிஸ்டன் ஹான்கே திடீரென சுயநினைவின்றி மயங்கி விழுந்துள்ளார். உடைந்த கணுக்காலில் ஏற்பட்ட இரத்தக் கட்டிகள் நுரையீரலுக்கு நகர்ந்ததன் காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளதாக குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
குறித்த பெண்ணின் உயிரைப் பாதுகாக்கும் தீவிர சிகிச்சை பிரிவின் உதவியை அவரது சகோதரியின் திருமண நாள் நிறைவடையும் வரை சில நிமிடங்கள் நீடிக்குமாறு குடும்பத்தினர் கோரியிருந்த நிலையில், ஆகஸ்ட் 20 ஆம் திகதி அதிகாலை அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவரது கணவர் மோர்கன் கிர்பி, இந்நாட்டில் சுகாதாரத்துறையின் இவ்வாறான அலட்சியங்களால் மக்கள் உயிரிழப்பது தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும், இதனால் எவரும் வியப்படையாத நிலை உருவாகியுள்ளதே மிகவும் பயங்கரமான விடயம் என்றும் வேதனையுடன் குறிப்பிட்டார்.
கிறிஸ்டன் ஹான்கேயின் மறைவு மிகவும் தீவிரமான அசம்பாவிதம் என வகைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் எனவும் சாஸ்கட்செவன் சுகாதார அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதேவேளை, இச்சம்பவம் தொடர்பில் ஆளும் நிர்வாகத்தை விமர்சித்துள்ள எதிர்க்கட்சியான என்டிபி கட்சியின் தலைவர் கார்லா பெக், மாகாணத்தின் சுகாதார கட்டமைப்பில் உடனடி சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
சாஸ்கட்செவன் மாகாணத்தில் கடந்த 2024-25 நிதியாண்டில் மாத்திரம் சத்திரசிகிச்சைக்காக நீண்ட காலம் காத்திருந்த வேளையில் 333 பேர் உயிரிழந்துள்ளதாக எதிர்க்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
