அமெரிக்க-கனடா வர்த்தகப் போருக்கு மத்தியில் கனடிய மேப்பிள் சிரப் ஏற்றுமதி சர்வதேச சந்தையில் அதிரடி அதிகரிப்பு

அமெரிக்க-கனடா

அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இடையிலான வர்த்தகப் போர் தீவிரமடைந்து வரும் சூழ்நிலையிலும், சுத்திகரிக்கப்பட்ட சீனிக்கான மாற்று இனிப்பூட்டிகளுக்கான கேள்வி அதிகரித்து வருவதாலும், கனடாவின் பாரம்பரிய உற்பத்தியான மேப்பிள் சிரப் (Maple Syrup) ஏற்றுமதி சர்வதேச சந்தையில் கணிசமான வளர்ச்சியடைந்துள்ளதாக கனேடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி கடந்த 2025 ஆம் ஆண்டில் கனடிய மேப்பிள் சிரப் ஏற்றுமதி ஊடாக 844.2 மில்லியன் டொலர்கள் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதுடன், இது முந்தைய ஆண்டை விட 17.2 சதவீத வளர்ச்சியாகும்.

நோவா ஸ்கோடியா மாகாணத்தில் உள்ள முன்னணி உற்பத்தி நிறுவனமான ஹட்சின்சன் ஏக்கர்ஸ் (Hutchinson Acres), சர்வதேச சந்தையிலிருந்து கிடைக்கப்பெறும் ஓடர்களின் எண்ணிக்கை வழமையை விட தீவிரமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

வழமையாக ஆண்டின் இக்காலப்பகுதியில் பாரியளவிலான ஏற்றுமதி கொள்கலன்கள் அனுப்பப்படுவதில்லை எனவும், ஆனால் தற்போது எதிர்வரும் ஒன்றரை மாத காலத்திற்குள் மூன்று கொள்கலன்களை நெதர்லாந்து, கொஸ்டா ரிக்கா மற்றும் சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் நிறுவனத்தின் இணை உரிமையாளர் கிறிஸ் ஹட்சின்சன் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க-கனடா வர்த்தக பதற்றங்கள் சர்வதேச அளவில் பேசப்படும் போதெல்லாம் கனடிய தயாரிப்புகளுக்கான ஆதரவு அதிகரிப்பதாக உற்பத்தியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். சுத்திகரிக்கப்பட்ட சீனிக்கு மாற்றாக ஆரோக்கியமான இனிப்பூட்டியை மக்கள் நாடுவதும் இந்த கேள்வி அதிகரிப்புக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

குறிப்பாக சவுதி அரேபியாவில் காப்பி தயாரிப்பில் சீனியைத் தவிர்த்து கனடிய மேப்பிள் சிரப்பை இனிப்பூட்டியாகப் பயன்படுத்தும் வழக்கம் தீவிரமாக அதிகரித்து வருவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

உலகளவில் உற்பத்தி செய்யப்படும் மேப்பிள் சிரப்பில் சுமார் 75 சதவீதத்தை கனடாவும், எஞ்சிய 25 சதவீதத்தை அமெரிக்காவும் உற்பத்தி செய்கின்றன. இந்நிலையில், ஐரோப்பிய சந்தைகளில் விநியோகம் செய்யும் இறக்குமதியாளர்கள், வாடிக்கையாளர்கள் வெறுமனே மேப்பிள் சிரப்பை மட்டும் கோராமல் அது கனடாவில் தயாரிக்கப்பட்டதா என்பதைத் திட்டவட்டமாக உறுதிப்படுத்திக் கொள்வதாகவும், தயாரிப்பு பூர்வீகத்திற்கு முன்னுரிமை அளிப்பதாகவும் தெரிவிக்கின்றனர். பிரித்தானிய சந்தையிலும் கனடிய மேப்பிள் உற்பத்திகளுக்கான கேள்வி தொடர்ச்சியாக அதிகரித்துவருகிறது.

கனடாவின் மொத்த மேப்பிள் உற்பத்தியில் கியூபெக் மாகாணம் 90 சதவீத பங்களிப்பை வழங்கி முதலிடம் வகிக்கின்ற போதிலும், ஏனைய மாகாண உற்பத்தியாளர்களும் இத்தகைய சர்வதேச கேள்வி அதிகரிப்பால் நேரடிப் பயனடைந்து வருகின்றனர். கனடாவின் தனித்துவ அடையாளமாகத் திகழும் மேப்பிள் சிரப் உற்பத்திகளுக்கு சர்வதேச மற்றும் உள்நாட்டு நுகர்வோர் மத்தியில் ஏற்பட்டுள்ள இந்த அதீத ஆதரவு, அந்நாட்டு ஏற்றுமதிப் பொருளாதாரத்திற்கு பாரிய பலத்தை சேர்த்துள்ளது.

Advertisement
Written by

இணையதளச் செய்திப் பிரிவு

சிறப்புச் செய்திகள் யாவும் இணையதள செய்திப் பிரிவு என்ற பெயரில் இணையதள ஆசிரிய குழுவினரால் பதிவேற்றப்படுகின்றன.