கிரீஸ் நாட்டின் ஏதென்ஸ் நகரைச் சேர்ந்த 54 வயதான கிறிஸ்டினா ரப்தி மற்றும் அவரது 60 வயது கணவர் கான்ஸ்டான்டினோஸ் தம்பதியினர், கடந்த ஆண்டு நிகழ்ந்த கோர சாலை விபத்தில் தங்களது 21 வயது ஒரே மகனைப் பறிகொடுத்து மீளாத் துயரில் தவித்தனர்.
மகனின் பிரிவால் உருக்குலைந்த இந்தத் தம்பதியினர், சுமார் 22 ஆண்டுகளுக்கு முன்பு 2004-ஆம் ஆண்டு தங்களது சொந்த கருமுட்டை மற்றும் விந்தணுவை இணைத்து ஆய்வகத்தில் பாதுகாப்பாக உறைநிலையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த கருவை, செயற்கைக் கருத்தரித்தல் (IVF) தொழில்நுட்பம் மூலமாக மீண்டும் கருப்பையில் செலுத்த முடிவு செய்தனர்.
கிரீஸ் நாட்டின் சட்ட விதிகளின்படி 54 வயது வரை மட்டுமே பெண்கள் இத்தகைய சிகிச்சையை மேற்கொள்ள முடியும் என்பதால், கிறிஸ்டினாவிற்கு வெறும் இரண்டரை மாத கால அவகாசம் மட்டுமே எஞ்சியிருந்தது. சட்ட ரீதியான கெடுபிடிகள் மற்றும் அதிக வயது ஆகிய பெரும் சவால்களைக் கடந்து, மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பு மற்றும் விடாமுயற்சியால் கிறிஸ்டினா வெற்றிகரமாகக் கர்ப்பமடைந்தார்.
தற்போது கிறிஸ்டினாவிற்கு 3.5 கிலோ எடையில் முழு ஆரோக்கியத்துடன் கூடிய அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. மருத்துவ உலகையே வியப்பில் ஆழ்த்திய இந்த நிகழ்வின் மூலம் தங்களுக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளதாகக் கூறும் தம்பதியினர், மறைந்த தங்களது மூத்த மகன் ஜார்ஜஸின் நினைவாக அக்குழந்தைக்கு ‘ஜார்ஜியா’ எனப் பெயர் சூட்டி மகிழ்ந்துள்ளனர்.
