ஆட்டோவில் இருந்து சாலையில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை மீட்பு

குழந்தை

தெலுங்கானா மாநிலம் மகபூப் நகரில் நள்ளிரவில் வேகமாகச் சென்ற ஆட்டோவில் இருந்து பச்சிளம் குழந்தை ஒன்று சாலையில் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நியூ டவுன் பகுதியில் சென்ற ஆட்டோவில் இருந்து வீசப்பட்ட ஒரு சிறிய மெத்தை மற்றும் சால்வையில் சுற்றப்பட்டிருந்த பச்சிளம் குழந்தையின் அழுகுரல் சத்தத்தைக் கேட்டு, அவ்வழியாகச் சென்ற இளைஞர்கள் உடனடியாகக் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள், பச்சிளம் குழந்தை நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாகத் தெரிவித்தனர். குழந்தையைச் சாலையில் வீசிச் சென்ற நபர்களைக் கண்டறியும் நோக்கில் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கொண்டு காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அந்தக் குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்க விரும்புவதாகக் கூறிப் பொதுமக்கள் பலர் மருத்துவமனை வளாகத்தில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. குழந்தையைத் தத்தெடுக்கும் அதிகாரம் தங்களுக்குக் கிடையாது எனவும், இது தொடர்பாக மாவட்டக் குழந்தைகள் நல அலுவலகத்தை அணுகுமாறும் வந்திருந்தவர்களிடம் மருத்துவர்கள் தெளிவுபடுத்தினர்.

Advertisement
Written by

இணையதளச் செய்திப் பிரிவு

சிறப்புச் செய்திகள் யாவும் இணையதள செய்திப் பிரிவு என்ற பெயரில் இணையதள ஆசிரிய குழுவினரால் பதிவேற்றப்படுகின்றன.