உடல் தகனம் செய்யப்பட்டதாகக் கருதப்பட்ட பெண் 27 மாதங்களுக்குப் பின் உயிருடன் மீண்ட விநோதம்

உடல் தகனம்

உத்தரபிரதேச மாநிலம் லக்னோ அருகே இறந்துவிட்டதாகக் கருதி குடும்பத்தினரால் இறுதிச்சடங்கு செய்யப்பட்ட பெண் ஒருவர், 27 மாதங்களுக்குப் பிறகு உயிருடன் வீடு திரும்பிய சம்பவம் அப்பகுதியில் பெரும் ஆச்சரியத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

லக்னோவின் நவிகோட் நந்தனா கிராமத்தைச் சேர்ந்த 28 வயதான சிவானி என்ற பெண் கடந்த 2024-ம் ஆண்டு மே 2-ம் தேதி திடீரென மாயமானார். அதனைத் தொடர்ந்து அதே ஆண்டு ஜூலை 16-ம் தேதி அப்பகுதியில் உள்ள கால்வாய் ஒன்றில் அழுகிய நிலையில் பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

சடலத்தின் கையில் கட்டப்பட்டிருந்த கயிறு மற்றும் விரலில் இருந்த மோதிரம் ஆகிய அடையாளங்களை வைத்து, அது சிவானியின் உடல்தான் என்று அவரது குடும்பத்தினர் உறுதி செய்தனர். இதையடுத்து முறைப்படி அவரது இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டு உடல் தகனம் செய்யப்பட்டது.

இந்தச் சூழலில், காணாமல் போனதாகக் கருதப்பட்ட சிவானி கடந்த சனிக்கிழமை தனது பெற்றோர் வீட்டுக்கு உயிருடன் திரும்பி வந்துள்ளார். அவர் லக்னோவின் பாரா பகுதியில் ஜாவேத் என்பவருடன் வசித்து வந்தது முதற்கட்ட தகவலில் தெரியவந்துள்ளது.

சிவானி உயிருடன் திரும்பிவிட்ட நிலையில், முன்னர் தகனம் செய்யப்பட்ட சடலம் யாருடையது என்ற புதிய குழப்பம் எழுந்துள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர் மறுவிசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

Advertisement
Written by

இணையதளச் செய்திப் பிரிவு

சிறப்புச் செய்திகள் யாவும் இணையதள செய்திப் பிரிவு என்ற பெயரில் இணையதள ஆசிரிய குழுவினரால் பதிவேற்றப்படுகின்றன.