டயானாவின் மரணத்தின் போது மன்னர் சார்லஸின் நடத்தை: சார்லஸ் ஸ்பென்சரின் நினைவுக்குறிப்பால் சர்ச்சை

டயானாவின் மரணத்தின் போது

மறைந்த வேல்ஸ் இளவரசி டயானாவின் மரணம் நிகழ்ந்த காலகட்டத்தில் மன்னர் சார்லஸ் வெளிப்படுத்திய மனநிலை மற்றும் உரையாடல்கள் குறித்து டயானாவின் சகோதரர் சார்லஸ் ஸ்பென்சர் தனது புதிய நினைவுக்குறிப்பில் தெரிவித்துள்ள விடயங்கள் பிரித்தானியா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் பெரும் பேசுபொருளாகியுள்ளன. இங்கிலாந்து நாளிதழ் ஒன்றில் புதன்கிழமை வெளியான இவரது புத்தகப் பகுதியின் மூலமாக இந்தத் தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

டயானா உயிரிழந்த சில நாட்களுக்குப் பின்னர் தன்னிடம் பேசிய சார்லஸ், “நாம் அவரை விரைவில் மறந்துவிடுவோம்” எனக் குறிப்பிட்டதாக சார்லஸ் ஸ்பென்சர் தெரிவித்துள்ளார். அத்துடன், விபத்து நிகழ்ந்த இரவில் சார்லஸ் தொலைபேசியில் உரையாடியபோது, அவரது குரல் லொத்தர் வென்ற ஒருவரைப் போன்ற உற்சாகத்துடன் ஒலித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

1997 ஆகஸ்ட் மாதம் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் அதிவேகமாகச் சென்ற கார் விபத்துக்குள்ளானதில் கடுமையான உள்ளுறுப்புக் காயங்களுக்கு உள்ளாகி டயானா உயிரிழந்தார். அப்போது அவரது மகன்களான வில்லியம் மற்றும் ஹரிக்கு முறையே 15 மற்றும் 12 வயதாக இருந்தது.

இறுதிச்சடங்கின் பின்னர் நடைபெற்ற இறுதி ஊர்வலத்தில் சிறுவர்கள் இருவரும் பங்கேற்பதை தான் எதிர்த்ததாகவும், அது தொடர்பில் தொலைபேசியில் பேசியபோது சார்லஸ் மிகுந்த கோபத்துடன் பதிலளித்ததாகவும் ஸ்பென்சர் கூறியுள்ளார்.

சார்லஸ் ஸ்பென்சரின் இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு பக்கிங்ஹாம் அரண்மனை புதன்கிழமை கடும் எதிர்வினையாற்றியுள்ளது. இது தொடர்பாகக் கருத்து வெளியிட்டுள்ள அரண்மனை செய்தித் தொடர்பாளர், பொதுவாகப் புத்தகங்கள் குறித்து கருத்து தெரிவிப்பது தமது நடைமுறை இல்லை என்ற போதிலும், ஒரு சகோதரியை இழந்த துயரம் ஒருவரின் சிந்தனையை மங்கச் செய்து தீர்மானிக்கும் திறனைப் பாதிக்கலாம் என்பதையும், பல ஆண்டுகளுக்குப் பின்னர் நினைவுகள் பிறர் உணராத வகையில் மாற்றியமைக்கப்படலாம் என்பதையும் மன்னர் சார்லஸ் கவனத்தில் கொண்டுள்ளார் எனத் தெரிவித்துள்ளார்.

Advertisement