டயானா விபத்தில் சிக்கிய செய்தி கேட்டு ராணி எலிசபெத் அதிருப்தி: சகோதரர் ஏர்ல் ஸ்பென்சர் வெளியிட்ட தகவல்

ராணி எலிசபெத்

மறைந்த இளவரசி டயானா பாரிஸில் கார் விபத்துக்குள்ளான ஆரம்பக்கட்ட செய்தியைக் கேட்டபோது, மறைந்த பிரித்தானிய ராணி இரண்டாம் எலிசபெத் மிகுந்த எரிச்சலுடன் எதிர்வினையாற்றினார் என்று டயானாவின் சகோதரர் ஏர்ல் ஸ்பென்சர் தனது புதிய சுயசரிதை நூலில் குறிப்பிட்டுள்ளார். இங்கிலாந்து ஊடகமொன்றில் தொடராக வெளியாகி வரும் அவரது நினைவுக்குறிப்புகளின் புதிய பகுதியில் இந்தத் தகவல் இடம்பெற்றுள்ளது.

விபத்தின் தீவிரத் தன்மை மற்றும் டயானாவின் உயிருக்கு ஏற்பட்ட ஆபத்து குறித்து முழுமையாகத் தெரியவருவதற்கு முன்னரே ராணி இந்த அதிருப்தியை வெளியிட்டதாக ஸ்பென்சர் கூறியுள்ளார். விபத்து தொடர்பான முதற்கட்ட தகவலைக் கேட்டவுடன், “இப்போது அவள் என்ன புதுப் பிரச்சனை செய்கிறாள்?” என்று எரிச்சலான தொனியில் ராணி எலிசபெத் கேட்டதாக அவர் தனது நூலில் விவரித்துள்ளார்.

எனினும், டயானாவின் மறைவுக்குப் பின்னர் அவரது ‘HRH’ என்ற அரச கௌரவப் பட்டத்தை மீண்டும் டயானாவிற்கு வழங்குவதற்கு ராணி முன்வந்ததாகவும், அதற்கான தகவலைத் தனது தனிப்பட்ட செயலாளர் மூலம் அனுப்பி வைத்ததாகவும் ஸ்பென்சர் தெரிவித்துள்ளார்.

கடந்த 1997 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 அன்று பாரிஸில் இடம்பெற்ற கார் விபத்தில் டயானா உயிரிழந்த ஐந்து நாட்களுக்குப் பின்னர், தொலைக்காட்சியில் நேரடியாகத் தோன்றி ராணி எலிசபெத் அஞ்சலி செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. தற்போது வெளியாகியுள்ள இந்த விபரங்கள் பிரித்தானிய அரச குடும்ப வட்டாரத்தில் மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளன.

Advertisement