இரட்டை சகோதரர்களுக்கு இரட்டை சகோதரிகள் – இரட்டை பாதிரியார்கள் நடத்தி வைத்த அபூர்வ திருமணம்!

இரட்டை சகோதரிகள்

பொதுவாகவே இரட்டையர்களைக் காண்பது என்பது அரிதான விஷயம்; ஆனால், இரட்டை சகோதரர்கள் இரட்டை சகோதரிகளை மணந்து, அந்தத் திருமணத்தை இரட்டை பாதிரியார்கள் நடத்தி வைத்த அபூர்வ நிகழ்வு ஒன்று கேரளாவில் நடைபெற்றுள்ளது. இந்த வித்தியாசமான திருமணம் அப்பகுதியில் பெரும் ஆர்வத்தையும், வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவின் சங்கனாச்சேரி, வெட்டுபரம்பில் பகுதியைச் சேர்ந்த குஞ்சுமோன் தாமஸ் – ஜோமோல் தம்பதியினரின் இரட்டை மகன்கள் அகில் மற்றும் நிகில். இவர்கள், பத்தனம்திட்டா மாவட்டம், குளத்தூர், கும்புலுவேலியைச் சேர்ந்த டோமிச்சன் – மேரிக்குட்டி தம்பதியினரின் இரட்டை மகள்களான மகி மற்றும் மரியாவை மணந்துள்ளனர்.

கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற இந்தக் கோலாகல திருமண விழா, சங்கனாச்சேரி மெட்ரோபாலிட்டன் தேவாலயத்தில் விமரிசையாக நடைபெற்றது. அகில் மேகியையும், அகிலின் இரட்டை சகோதரரான நிகில் மேகியின் இரட்டை சகோதரியான மரியாவையும் மணந்ததன் மூலம், இந்த இரட்டைத் திருமணம் நிறைவு பெற்றது.

இந்த அரிய திருமணத்திற்கு மேலும் ஒரு சிறப்பு உண்டு. காஞ்சிரப்பள்ளி மறைமாவட்டத்தைச் சேர்ந்த இரட்டைப் பாதிரியார்களான அருட்தந்தை ஆன்டோ பேழும்கட்டில் மற்றும் அருட்தந்தை அஜோ பேழும்கட்டில் ஆகியோர் இந்தத் திருமணத்திற்குத் தலைமை தாங்கி நடத்தி வைத்தனர். மேலும், பாலா பகுதியைச் சேர்ந்த இரட்டை சகோதரர்களான ஜெரோன் ஜேம்ஸ் மற்றும் ஜோஹன் ஜேம்ஸ் ஆகியோர் பலிபீடத்தில் உதவியதும் இந்த நிகழ்வின் தனிச்சிறப்பை அதிகப்படுத்தியது.

இந்த இரு சகோதரர்களும் வணிகக் கப்பல் துறையில் பணிபுரிந்து வரும் நிலையில், சகோதரிகளான மகி மற்றும் மரியா ஆகியோர் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரிந்து வருகின்றனர். இந்தத் திருமணம் குறித்து மகி மற்றும் மரியா கூறுகையில், “இரட்டைக் குழந்தைகள் நிறைந்த சூழலில் திருமணம் செய்துகொள்வது எங்கள் சிறுவயதிலிருந்தே கனவாக இருந்தது. எங்கள் பெற்றோரும் குடும்பத்தினரும் கூட இதை மிகவும் விரும்பினார்கள்” என்று தெரிவித்துள்ளனர்.

இந்த அபூர்வத் திருமணத்தை நடத்தி வைத்த பாதிரியார்களும் தங்களது மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டனர். “இரட்டைக் குழந்தைகளின் திருமணத்தை நடத்தி வைப்பது மிகவும் சிறப்பானதும், வாழ்நாள் முழுவதும் நினைவில் இருக்கக்கூடிய அனுபவமுமாகும். அவர்கள் ஒன்றாகப் பிறந்தார்கள், இப்போது ஒன்றாக ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்குகிறார்கள். எங்களைப் பொறுத்தவரையிலும் நாங்கள் இருவரும் ஒன்றாகவே பாதிரியார்கள் ஆனோம்; இவை அனைத்தும் மிக அழகான நினைவுகள்” என்று அவர்கள் உருக்கமாகக் கூறினர். இந்த நிகழ்வு சமூக வலைதளங்களில் வைரலாகி, பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

LATEST Post

© 2026 Colombo Tamil | All rights reserved | Made With By WebpressHub.net