திருமணத்தின் மீதான பாரம்பரிய அழுத்தம் மற்றும் தனிப்பட்ட தேர்வுகளுக்கு இடையே இளம் பெண்கள் தற்போது புதிய வழிகளைத் தேடிக்கொண்டிருக்கின்றனர். குறிப்பாக, வியட்நாமில், பெண்கள் தாங்கள் விரும்பும் வரை திருமணம் செய்யாமல் இருக்க, ஆனால் குடும்ப நிகழ்வுகளில் “காதலன்” இல்லாமல் ஏற்படும் சிக்கல்களைத் தவிர்க்க, ஆண் நண்பர்களை வாடகைக்கு அழைத்து வரும் போக்கு வேகமாக பரவி வருகிறது.
இந்த பழக்கம், குறிப்பாக சந்திர புத்தாண்டு போன்ற முக்கிய குடும்பக் கூட்டங்களில் மிகவும் பிரபலமாக உள்ளது. குடும்பத்தினர் திருமணத்தைப் பற்றி அதிகம் கேட்கத் தொடங்கும்போது, பல இளம் பெண்கள் ஒரு நாட்களுக்கு மட்டும் “காதலன்” தேவைப்படுகிறார்கள். இந்தத் தேவையை நிறைவேற்றுவதற்காக, பல வியட்நாமிய ஆண்கள் இதை ஒரு தொழிலாகவே மாற்றியுள்ளனர்.
Nam Dinh பகுதியைச் சேர்ந்த 30 வயதான மின் து, தனது தொழில் முன்னேற்றத்தில் கவனம் செலுத்தியதால் காதலனை வீட்டிற்கு அழைத்து வர முடியவில்லை. பெற்றோரின் அதிகரிக்கும் அழுத்தத்திலிருந்து விடுபட, அவர் பல மில்லியன் வியட்நாமிய டாங் செலவழித்து ஒரு ஆணை தற்காலிக காதலனாக வாடகைக்கு எடுத்தார். அந்த நாளில், அவர் மின் துவின் அம்மாவுக்கு சமையலில் உதவினார், உறவினர்களுடன் இயல்பாக உரையாடினார். “என் பெற்றோர் என்னைப் பற்றி மிகவும் மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருந்ததைப் பார்த்து நீண்ட நாட்களாகிவிட்டன,” என்று South China Morning Post-க்கு அவர் தெரிவித்தார்.
இதேபோல், கான் நோகோக் என்பவரும் தனது பெற்றோரை சமாதானப்படுத்த, ஒரு காதலனை வாடகைக்கு அழைத்தார். இதன் மூலம், அவரது பெற்றோருடனான உறவு மேம்பட்டது என்று அவர் கூறினார்.
இந்த தேவையைப் பூர்த்தி செய்ய, 25 வயதான ஹுய் துவான் போன்ற ஆண்கள் இதை முழுநேர வேலையாக மாற்றியுள்ளனர். துவான், காபி டேட்டுகள், ஷாப்பிங், குடும்ப விழாக்கள் வரை பல்வேறு சேவைகளை வழங்குகிறார். இரண்டு மணி நேர டேட்டுக்கு ₹10–20 (அமெரிக்க டாலர்) விலை வசூலித்தாலும், குடும்ப நிகழ்வுகளில் கலந்து கொள்ள ₹40 வரை கட்டணம் வசூலிக்கிறார்.
ஆனால், இதற்கு ஒரு கடுமையான நிபந்தனை உண்டு: பாலியல் அல்லது உணர்ச்சிரீதியான தொடர்புகள் முற்றிலும் தடை. அவரது சேவை தற்காலிகமானதும், தொழில்முறையானதும் மட்டுமே.
எனினும், நிபுணர்கள் இந்த போக்கு குறித்து கவலை தெரிவிக்கின்றனர். உண்மை வெளிப்பட்டால், குடும்பங்கள் உணர்ச்சி ரீதியான பாதிப்புகளை சந்திக்க நேரிடும் என்றும், இந்த வாடகை உறவுகளுக்கு வியட்நாமில் சட்டப் பாதுகாப்பு இல்லை என்பதால், பெண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அவர்கள் எச்சரிக்கின்றனர்.








