15 வயது சிறுவனிடம் 31 வயது வீரரின் மல்லுக்கட்டு! – ஜேமிசனின் ‘செண்ட்-ஓஃப்’ சர்ச்சைக்குள்ளானது ஏன்?

கைல் ஜேமிசன்

டெல்லி கேப்பிட்டல்ஸ் வேகப்பந்து வீச்சாளரான 31 வயதான கைல் ஜேமிசன், 15 வயதேயான வைபவ் சூர்யவன்ஷியை வீழ்த்திய பின் வெளிப்படுத்திய ஆக்ரோஷமான கொண்டாட்டமும், ‘செண்ட்-ஓஃப்’ முறையும் தற்போது கிரிக்கெட் உலகில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆட்டத்தின் இரண்டாவது ஓவரின் ஐந்தாவது பந்தில் ஜேமிசன் வீசிய துல்லியமான இன்ஸ்விங்கிங் யார்க்கர், சூர்யவன்ஷியின் மட்டையின் நுனியில் பட்டு ஸ்டம்புகளைப் பதம் பார்த்தது. அதற்கு முந்தைய பந்தில் சூர்யவன்ஷி ஒரு பவுண்டரி விளாசியிருந்த நிலையில், அடுத்த பந்திலேயே அவரை வீழ்த்திய ஜேமிசன் மிகுந்த உற்சாகத்துடன் தனது ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினார்.

உலகச் சாதனைகளை எதிர்நோக்கிக் களமிறங்கிய சூர்யவன்ஷிக்கு இந்த ஆட்டமிழப்பு பெரும் ஏமாற்றமாக அமைந்தது. கீரன் பொல்லார்டின் சாதனையை முறியடித்து டி20 கிரிக்கெட்டில் குறைந்த பந்துகளில் 100 சிக்ஸர்களை விளாசிய வீரர் என்ற பெயரைப் பெறவும், 20 வயதுக்குட்பட்ட பிரிவில் 100 சிக்ஸர்களை எட்டிய முதல் வீரர் என்ற சாதனையைப் படைக்கவும் அவருக்கு இன்னும் ஒரு சிக்ஸர் மட்டுமே தேவைப்பட்டது.

தற்போதைய ஐபிஎல் தொடரில் 237.64 என்ற அபார ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடிவரும் சூர்யவன்ஷியின் விக்கெட் டெல்லி அணிக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. ஆனால், இளம் வீரருக்கு முன்னால் ஜேமிசன் ஆக்ரோஷமாக கைதட்டி வழியனுப்பிய விதம் சமூக வலைதளங்களில் ஆதரவையும் எதிர்ப்பையும் ஒருசேரப் பெற்றுள்ளது.

ஒரு தரப்பினர் இது தொழில்முறை கிரிக்கெட் என்றும், வயது இங்கு ஒரு பொருட்டல்ல என்றும் கூறி ஜேமிசனை ஆதரிக்கின்றனர். மறுதரப்பினர், 31 வயது சர்வதேச வீரர் ஒருவர் தனது பாதி வயதுகூட நிரம்பாத ஒரு சிறுவனிடம் இவ்வளவு ஆக்ரோஷத்தை வெளிப்படுத்துவது தேவையற்றது எனக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இதற்கிடையில், சூர்யவன்ஷி ஆட்டத்தில் ஏற்படுத்தியிருக்கும் பெரும் தாக்கமும், டெல்லி பவுலர்களுக்குள் இருந்த பயமுமே ஜேமிசனின் இந்த ஆக்ரோஷத்துக்குக் காரணம் எனச் சில இரசிகர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம், நவீன கிரிக்கெட்டில் வீரர்களின் கள நடத்தை, ஆக்ரோஷத்தின் எல்லை மற்றும் விளையாட்டு நாகரிகம் குறித்த விவாதத்தை மீண்டும் ஒருமுறை சூடுபிடிக்கச் செய்துள்ளது.

© 2026 Colombo Tamil | All rights reserved | Made With By WebpressHub.net