கேட்ச் பிடிக்கலாம்.. அதுக்குனு இப்படியா.. பேட்டரை மிரள வைத்த ஸ்மித்தின் கேட்ச்!

ஸ்மித்தின் கேட்ச்

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் ஷெஃபீல்ட் சீல்ட் தொடரில், நியூ சவுத் வேல்ஸ் (NSW) மற்றும் விக்டோரியா (VIC) அணிகளுக்கு இடையேயான ஆட்டம் கடந்த 10-ந் தேதி தொடங்கியது. இந்த ஆட்டத்தில் ஸ்டீவ் ஸ்மித் பிடித்த ஒரு அற்புதமான கேட்ச், களத்தில் இருந்த பேட்டரையே அதிர்ச்சியடைய வைத்ததால், அதன் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

டாஸ் வென்ற விக்டோரியா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணி முதல் இன்னிங்சில் 382 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதைத்தொடர்ந்து களமிறங்கிய நியூ சவுத் வேல்ஸ் அணி 128 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

தொடர்ந்து, 2-வது இன்னிங்சை ஆடிய விக்டோரியா அணி 171 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்த நிலையில், டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. இதன் காரணமாக நியூ சவுத் வேல்ஸ் அணிக்கு வெற்றி இலக்காக 425 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது.

நியூ சவுத் வேல்ஸ் அணியின் 2-வது இன்னிங்சில், அவர்கள் 117 ரன்கள் எடுத்திருந்த போது இந்த மிரட்டலான கேட்ச் நிகழ்ந்தது. நாதன் லயன் வீசிய பந்தை, பேட்டரான பெர்கஸ் ஓ நீல் கட் ஷாட் அடிக்க முயற்சி செய்தார்.

 

அப்போது பந்து அவரது பேட்டின் நுணியில் பட்டு, வேகமாகவும், சற்று விலகியும் சிலிப் திசையை நோக்கிச் சென்றது. சிலிப் திசையில் நின்றிருந்த ஸ்மித், அந்தப் பந்தை சற்றும் எதிர்பாராத விதமாக, அசால்ட்டாகப் பிடித்து அசத்தினார்.

ஸ்மித் சிலிப் திசையில் பல அற்புதமான கேட்ச்கள் பிடித்திருந்தாலும், இந்தக் கேட்ச் மிகவும் மிரட்டலாக இருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஸ்மித் பிடித்த வேகமான அந்த கேட்சைப் பார்த்த பேட்டர் பெர்கஸ் ஓ நீல், அதிர்ச்சியடைந்து, ஷாக் ஆன நிலையில் கிழே விழுவதுபோல ஒரு ரியாக்ஷன் கொடுத்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

இறுதியில், 425 ரன்கள் வெற்றி இலக்குடன் விளையாடிய நியூ சவுத் வேல்ஸ் அணி, 125 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் விளைவாக, விக்டோரியா அணி 300 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய வெற்றியைப் பதிவு செய்தது.

© 2026 Colombo Tamil | All rights reserved | Made With By WebpressHub.net