நேபாள வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பெண்ணை போராடி மீட்ட ராணுவத்தினர்

ராணுவத்தினர்

நேபாளத்தின் போடேகோஷி நதியில் கடந்த 26-ஆம் தேதி காலையில் ஏற்பட்ட பயங்கர வெள்ளம், சீன எல்லையை ஒட்டிய பிராந்தியம் முழுவதையும் சீர்குலைத்துள்ளது. போடேகோஷியின் கிளை நதியான லெண்டேயின் நீரோட்டத்தை பனிச்சரிவு தடுத்ததால் உருவான ஏரி உடைந்து, வெள்ளம், பாறைகள், மண், சேறு என பெரும் பிரளயமே ஏற்பட்டது. இதுவரை 682 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 3,000-க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை.

இந்த சோகத்திற்கு மத்தியில், ஒரு கிராமத்தில் வெள்ள நீர் புகுந்து அனைத்து வீடுகளையும் அடித்துச் சென்றது. அப்போது, ஒரு பெண் வெள்ளத்தின் சீற்றத்தில் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டு அடித்துச் செல்லப்பட்டார். இதைப் பார்த்த நேபாள மீட்புக்குழுவினரும் ராணுவ வீரர்களும் உடனடியாக செயல்பட்டு, சீறிப்பாய்ந்த வெள்ள நீரைத் துணிச்சலுடன் எதிர்கொண்டு, கடுமையான போராட்டத்திற்குப் பிறகு அந்தப் பெண்ணைப் பத்திரமாக மீட்டனர்.

வெள்ளத்தில் இருந்து மீட்கப்பட்ட அந்தப் பெண், அருகில் இருந்த ஒரு பெரிய பாறையின் மீது அமர வைக்கப்பட்டார். கண்ணிமைக்கும் நேரத்தில் தன் வீடு சின்னாபின்னமானதையும், ஒட்டுமொத்த குடும்பத்தினரும் வெள்ளத்தில் காணாமல் போனதையும் நினைத்து அவர் நிலைகுலைந்து போயிருந்தார். “எல்லாவற்றையும் இழந்துவிட்டேனே… இனி நான் என்ன செய்யப் போகிறேன்?” என்று வேதனையிலும் அதிர்ச்சியிலும் உறைந்து போய் அமர்ந்திருந்த அந்தப் பெண்ணின் அருகில் ராணுவ வீரர்கள் அமர்ந்து, “நாங்கள் இருக்கிறோம், உங்களுக்குப் பாதுகாப்பாகத் துணையிருப்போம்” என்று கனிவான வார்த்தைகளால் ஆறுதலும் தைரியமும் கூறினர்.

இந்த உருக்கமான மீட்புக் காட்சி, வெள்ளத்தில் எல்லாவற்றையும் இழந்த மக்களின் மன இறுக்கத்தையும், மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளவர்களின் மனிதாபிமானத்தையும் காட்டுவதாக அமைந்துள்ளது. நேபாளத்தில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி பலரையும் நெகிழ வைத்துள்ளது.

Written by

இணையதளச் செய்திப் பிரிவு

சிறப்புச் செய்திகள் யாவும் இணையதள செய்திப் பிரிவு என்ற பெயரில் இணையதள ஆசிரிய குழுவினரால் பதிவேற்றப்படுகின்றன.