சிகாகோ விமான நிலையத்தில் ரன்வேயில் வெடித்த விமான டயர்கள் – 172 பயணிகள் உயிர் தப்பினர்!

சிகாகோ
Advertisement

அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தில் உள்ள சிகாகோ ஓஹேர் சர்வதேச விமான நிலையத்தில், அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 737 ரக ஜம்போ விமானம், வடக்கு கரோலினாவின் சார்லோட் நகருக்கு பயணிகளை ஏற்றிச் செல்ல தயாராகிக் கொண்டிருந்தது. அந்த விமானத்தில் 172 பயணிகளும், 20-க்கும் மேற்பட்ட விமானப் பணியாளர்களும் இருந்தனர்.

மதியம் 2 மணியளவில், விமானம் புறப்படுவதற்கான அனுமதி கட்டுப்பாட்டு அறையிலிருந்து கிடைத்தது. உடனே, விமானம் ஓடுபாதையில் நகரத் தொடங்கியது. அப்போது, விமானத்தின் வலதுபுறத்தில் இருந்த இரண்டு டயர்களும் திடீரென வெடித்துச் சிதறின. இதனால் உடனடியாக விமானத்தின் அந்தப் பகுதியில் தீப்பற்றி புகை எழுந்தது. மேலும், விமானம் பலமாக குலுங்கியதால் பயணிகள் மத்தியில் அச்சமும் பதற்றமும் ஏற்பட்டன. ஆனால், புறப்படும் முன்பு இத்தகைய சிறு சம்பவங்கள் இயற்கையானவை எனக் கருதி, பயணிகளும் விமானிகளும் அதை அலட்சியமாகக் கடந்தனர்.

இருப்பினும், பின்னால் இருந்த மற்றொரு விமானத்தின் விமானி, இந்த திடீர் டயர் வெடிப்பு மற்றும் புகையை கவனித்தார். அவர் உடனடியாக விமான கட்டுப்பாட்டு அறைக்கு இதுபற்றி தகவல் தெரிவித்தார். இதன் காரணமாக, விமானம் ஓடுபாதையில் இருந்து புறப்பட்டு வானில் பறப்பதற்கு முன்பே உடனடியாக நிறுத்தப்பட்டது.

அதைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு வீரர்கள் விரைந்து வரவழைக்கப்பட்டனர். அவர்கள் விமானத்தில் பற்றி எரிந்த தீயை கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர். பயணிகள் அனைவரும் பத்திரமாக விமானத்திலிருந்து இறக்கி வைக்கப்பட்டு, பஸ்கள் மூலம் விமான முனையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் பயணிகள் அல்லது பணியாளர்கள் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.

பின்னர், அந்த 172 பயணிகளுக்கும் மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டு, அவர்கள் சார்லோட் நகருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்தச் சம்பவம் காரணமாக பயணிகள் சுமார் 8 மணி நேர தாமதத்தை சந்தித்தனர்.

குறிப்பிடத்தக்கது, கடந்த இரண்டு வாரங்களில் சிகாகோ விமான நிலையங்களில் நிகழும் ஐந்தாவது டயர் வெடிப்பு சம்பவம் இதுவாகும். இது குறித்து அமெரிக்க மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் (FAA) விசாரணையை மேற்கொண்டு வருகிறது. எனினும், இந்த சம்பவங்களுக்கிடையே எந்த தொடர்பும் இல்லை என்றும், இவை வெவ்வேறு ஓடுபாதைகள் மற்றும் வெவ்வேறு விமான மாடல்களில் நிகழ்ந்துள்ளதாகவும் சிகாகோ விமான போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

இந்த விபத்து பெரும் பேரழிவாக மாறாமல் தடுக்கப்பட்டது அந்த அனுபவமிக்க விமானியின் விழிப்புணர்வும், உடனடி நடவடிக்கையுமே காரணம் என விமான போக்குவரத்து நிபுணர்கள் பாராட்டியுள்ளனர்.

Advertisement
Written by

இணையதளச் செய்திப் பிரிவு

சிறப்புச் செய்திகள் யாவும் இணையதள செய்திப் பிரிவு என்ற பெயரில் இணையதள ஆசிரிய குழுவினரால் பதிவேற்றப்படுகின்றன.