கிரிக்கெட் விளையாட்டின் மிக நேர்த்தியான வீரர்களில் ஒருவராகக் கருதப்படும் இலங்கை கிரிக்கெட் அணியின் புகழ்பெற்ற முன்னாள் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனான குமார் சங்கக்காரா, அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலும் 38 டெஸ்ட் சதங்கள் உட்பட 28,000க்கும் அதிகமான ஓட்டங்களைக் குவித்து சாதனை படைத்தவர்.
2017ஆம் ஆண்டில் ஓய்வு பெற்ற பிறகு, அவர் வர்ணனையாளர், நிர்வாகி மற்றும் பயிற்சியாளராகச் செயல்பட்டு வருகிறார்.
கிரிக்கெட்டுக்கு அப்பாற்பட்டு, இலங்கையின் தெற்கு கடற்கரையில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டை நகரமான காலியில் உள்ள ஒரு பாரம்பரிய திட்டத்தில் அவர் தனது ஆர்வத்தைச் செலுத்தியுள்ளார்.
சங்கக்காராவும் அவரது மனைவி யெஹாலியும் அங்குள்ள கொலோனியல் காலத்து இல்லம் ஒன்றை, காலியின் தனித்துவமான கட்டடக்கலை பாணிகள் மாறாமல், ஒரு நவீன குடும்ப இல்லமாக மாற்றியுள்ளனர்.
யுனெஸ்கோ பாரம்பரியப் பகுதியில் 120 ஆண்டுகள் பழமையான இல்லம்
காலிக் கோட்டையானது 1600களில் இருந்து போர்த்துகீசிய மற்றும் டச்சு வர்த்தகர்களால் கட்டப்பட்ட ஒரு பலப்படுத்தப்பட்ட நகரமாகும். யுனெஸ்கோ அமைப்பின் கூற்றுப்படி, இது “தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் ஐரோப்பியர்களால் கட்டப்பட்ட கோட்டை நகரங்களுள் மிகச் சிறந்த எஞ்சியிருக்கும் எடுத்துக்காட்டு” என உலக பாரம்பரியப் பட்டியலில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இந்த காலி கோட்டைப் பகுதியில் அமைந்துள்ள 120 ஆண்டுகள் பழமையான டச்சு இல்லத்தைத்தான் சங்கக்காரா தம்பதியினர் வாங்கியுள்ளனர். அவர்கள் இந்த இல்லத்தைக் கடந்து செல்லும் போதெல்லாம், இதன் மீது ஈர்ப்பு கொண்டிருந்தனர்.
திடீர் அதிர்ச்சியும் மறுசீரமைப்பும்
“இதுதான் நமக்கு ஏற்ற வீடு என்று எங்களுக்குத் தெரியும்” என்று சங்கக்காரா கூறியுள்ளார். 2008ஆம் ஆண்டில் அவர்கள் இந்த வீட்டை வாங்கியபோது, அதன் உட்பகுதியை அவர்கள் பார்த்திருக்கவில்லை. ஆனால், வாங்கிய பிறகு முதன்முதலாக வீட்டிற்குள் நுழைந்தபோது அவர்களுக்கு ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டின் உட்புறம் முற்றிலும் சேதமடைந்து காணப்பட்டது.
இதையடுத்து, பழமையைப் பாதுகாத்து புதிய பொலிவுடன் வீட்டை வடிவமைக்க, கட்டிடக் கலைஞர்களான ஜீவன் டி சோசா, முராத் இஸ்மாயில் மற்றும் உட்புற வடிவமைப்பாளரான அன்னிகா பெர்னாண்டோ ஆகியோரின் உதவியை நாடினர். அவர்கள் இந்த பாரம்பரிய இல்லத்தை வெப்பமான, தனித்துவமான மற்றும் அழகான இலங்கை பாணியில் வடிவமைத்தனர்.

இல்லத்தின் சிறப்பம்சங்கள்
சுமார் 120 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட நான்கு படுக்கையறைகளைக் கொண்ட இந்த இல்லத்தில், மூன்று முற்றம் போன்ற தோட்டங்கள் மற்றும் கூரையில் ஒரு நீச்சல் குளம் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நீச்சல் குளத்தில் இருந்து வரலாற்றுச் சிறப்புமிக்க காலி கலங்கரை விளக்கத்தின் அழகிய காட்சியைக் காண முடியும்.
ஒவ்வொரு அறையிலும் கலைப்படைப்புகளும் பழங்காலப் பொருட்களும் வைக்கப்பட்டுள்ளன.
இங்குள்ள முக்கிய ஈர்ப்பு, இலங்கை கலைஞர் பிரகீத் மனோஹன்சாவின் பிரம்மாண்டமான சிற்பமாகும். இந்தச் சிற்பம் வீட்டின் வாசல்களின் வழியே கொண்டு செல்ல முடியாத அளவுக்குப் பெரியதாக இருந்தது. இதனால், சீரமைப்புப் பணிகள் தொடங்குவதற்கு முன்பே அச்சிற்பத்தை உள்ளே கொண்டு வந்து வைத்துவிட்டு, பின்னர் அதைச் சுற்றியே வீட்டை மறுசீரமைத்துள்ளனர்.

பழமையும் புதுமையும் இணைந்த வடிவமைப்பு
பழமையான கட்டிடங்களின் இடவசதிகளைக் கையாள்வது மிகப்பெரிய சவாலாக இருந்தது என்று கட்டிடக் கலைஞர் முராத் இஸ்மாயில் தெரிவித்துள்ளார். டச்சு கோட்டையின் கட்டமைப்புக்கு உட்பட்டே பணிகளைச் செய்ய வேண்டியிருந்ததோடு, பழைய சுவர்களை இடிப்பதற்கும் அவர் எதிர்ப்பு தெரிவித்தார்.
இதனால் முந்தைய காலங்களில் எவ்வாறு பவளப் பாறைகளைக் கொண்டு சுவர்கள் கட்டப்பட்டன என்பதை விளக்கும் வகையில் சில பகுதிகள் அப்படியே திறந்து வைக்கப்பட்டுள்ளன.
சுவர்களின் பழைய பூச்சுகள் அப்படியே தக்கவைக்கப்பட வேண்டும் என்பதில் வடிவமைப்பாளர் அன்னிகா பெர்னாண்டோ உறுதியாக இருந்தார். ஈரப்பதம் மற்றும் காலப்போக்கில் ஏற்பட்ட நிற மாற்றங்கள், புதிய சுவர்களுக்கு மத்தியில் ஒரு தனித்துவமான அழகைத் தந்தன.
இந்த இல்லம் சங்கக்காரா தம்பதியினரின் தனிப்பட்ட விருப்பங்களையும், இலங்கையின் பாரம்பரியத்தையும் பிரதிபலிக்கும் வகையில் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

