நேபாளத்தின் போடேகோஷி நதியில் பனிச்சரிவு மற்றும் பனிப்பாறை உடைப்பு காரணமாக ஏற்பட்ட பெருவெள்ளம் இன்னும் முழுமையாக தணியாமல் இருக்கும் நிலையில், மற்றொரு பேரிடர் அச்சுறுத்தல் எழுந்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 350-ஐத் தாண்டியுள்ள நிலையில், சீனா புதிய வெள்ள எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது .
சீன நீர்வள அமைச்சகத்தின் கூற்றுப்படி, சோச்சென் கோலா மற்றும் புரேபு சாங்போ ஆறுகள் சங்கமிக்கும் இடத்திற்கு அருகில் ஒரு புதிய தடுப்பு ஏரி உருவாகியுள்ளது. இந்த ஆறுகள் திபெத்தில் உருவாகி, நேபாளத்தில் பாய்ந்து போடே கோஷி நதியின் ஒரு பகுதியாக மாறுகின்றன. வியாழக்கிழமை காலை நிலவரப்படி, இந்த ஏரியில் சுமார் 20 லட்சம் கன மீட்டர் நீர் இருப்பதாகவும், இது அடுத்த 3 நாட்களில் 50 லட்சம் கன மீட்டராக உயரக்கூடும் என்றும் சீன அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். இந்த ஏரி உடைந்தால், கீழ்நோக்கி மிகப்பெரிய வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது .
இதையடுத்து, நேபாள அரசு போடேகோஷி, திரிசூலி மற்றும் நாராயணி நதிகளின் கரையோர மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர வேண்டுமென எச்சரிக்கை விடுத்துள்ளது. நதிக்கரையோரப் பகுதிகளில் வசிப்பவர்கள், பயணிகள் மற்றும் மீட்புப் பணியாளர்கள் அதீத விழிப்புடன் இருக்குமாறு நேபாள வெள்ள முன்னறிவிப்புப் பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது .
ஆகஸ்ட் 26 ஆம் தேதி லாங்டாங் லிருங் பனிமலையின் வடக்குப் பகுதியில் ஏறத்தாழ 5,200 மீட்டர் உயரத்தில் இருந்து 1,200 மீட்டர் கீழே பனிப்பாறையின் ஒரு பகுதி உடைந்து விழுந்ததே இந்த பேரிடருக்கான மூல காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. விழுந்த பனி மற்றும் பாறைகள் லெண்டே ஆற்றின் குறுகிய பள்ளத்தாக்கை அடைத்து, இயற்கை அணை ஒன்றை உருவாக்கியது. பின்னர் அது வெடித்து, பனி, கற்கள், மண் கலந்த அபாயகரமான வெள்ளப் பெருக்கு ராசுவா, நுவாகோட், தாடிங், கோர்க்கா மற்றும் சித்வான் மாவட்டங்களை நோக்கிப் பாய்ந்தது . இந்த வெள்ளப் பெருக்கு தேவ்காட்டில் வினாடிக்கு 5,850 கன மீட்டர் என பதிவானது. 1985-ம் ஆண்டு எவரெஸ்ட் பிராந்தியத்தில் ஏற்பட்ட பனிப்பாறை வெள்ளத்தை விட பல மடங்கு அதிகமான 20 மில்லியன் கன மீட்டர் நீர் 170 கிலோமீட்டர் தூரம் பாய்ந்துள்ளது .
இமயமலைப் பகுதியில் காலநிலை மாற்றத்தால் பனிப்பாறை ஏரிகள் அதிகரித்து வருவதே இத்தகைய திடீர் வெள்ளங்களுக்கு முக்கிய காரணம் என வல்லுநர்கள் கூறுகின்றனர். 2005-க்குப் பிறகு இமயமலைப் பகுதியில் உள்ள பனிப்பாறை ஏரிகள் 1,900-இலிருந்து 2,600-ஆக உயர்ந்துள்ளதாகவும், இப்பகுதி உலக சராசரியை விட வேகமாக வெப்பமடைந்து வருவதாகவும் மலைப்பகுதி ஒருங்கிணைந்த மேம்பாட்டு மையம் (ICIMOD) தெரிவித்துள்ளது .
