இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி ஃபாலோ ஆன் வழங்கி மிகப்பெரிய ஆதிக்கத்தில் இருந்தும் கூட, எதிர்பாராத விதமாக ஆட்டம் சமனில் முடிவடைந்தது. இருந்தபோதிலும், இரண்டு போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை இந்திய அணி 1–0 என்ற கணக்கில் வெற்றிகரமாக கைப்பற்றியது.
ஆனால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதற்கு வெற்றிகளே மிகவும் முக்கியம். இந்தச் சமன் இந்திய அணியின் புள்ளி நிலையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி, பைனல் வாய்ப்புகளுக்கு ஒரு பின்னடைவாக அமைந்துள்ளது.
போட்டி முடிந்த பின்னர் அணிக் கேப்டன் சுப்மன் கில் கூறுகையில்:
“உண்மையில் சொல்லப்போனால், இந்த ஆட்டத்தில் நாங்கள் எந்த மாற்றத்தைச் செய்திருந்தாலும், வெற்றி பெற்றிருக்க முடியாது என்றே நினைக்கிறேன். காரணம், கடந்த மூன்று நாட்களாக நாங்கள் நிறைய ஓவர்களை வீசி, களத்தில் மிகுந்த சோர்வில் இருந்தோம். எங்களால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் செய்துவிட்டோம்.”
“இலங்கை வீரர்கள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அவர்களின் பேட்டர்கள் தங்களின் திறமையை சிறப்பாக காடிப்படுத்தினர். மேலும், கொஞ்சம் அதிர்ஷ்டமும் அவர்களுக்கு சாதகமாக அமைந்தது. இந்தத் தொடர் எங்களுக்கு பல நல்ல விஷயங்களை கற்றுக்கொடுத்துள்ளது, மேலும் இலங்கை அணியிடமிருந்தும் சில முக்கிய பாடங்களைக் கற்றுக்கொண்டோம்.”
“ஃபாலோ ஆன் வாங்கி, மிகப்பெரிய நெருக்கடியில் இருந்து மீண்டு வந்த இலங்கை அணியின் மனவலிமையை நான் பாராட்ட வேண்டும். எங்கள் அணியில் படிக்கல், மானவ் சுதர் மற்றும் ராகுல் ஆகியோர் மிகச் சிறப்பாக செயல்பட்டனர். எங்களின் வேகப்பந்துவீச்சாளர்களும் தங்கள் பங்கிற்கு நன்றாக பந்துவீசினர்.”
“டெஸ்ட் கிரிக்கெட் விளையாட இதுவே எங்களுக்கு சிறந்த காலம் என நம்புகிறோம். தொடர்ந்து அதே தரத்தில் விளையாடவும், பயிற்சியில் செய்ததை களத்தில் நடைமுறைப்படுத்தவும் வேண்டும். மானவ் சுதரின் பந்துவீச்சு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அவர் பந்தை வீசும் போது கை மற்றும் மணிக்கட்டைப் பயன்படுத்தும் விதம் அற்புதம். அவர் வரும் காலங்களில் எங்களின் மிக முக்கிய பந்துவீச்சாளராக உருவெடுப்பார்.”
இதையடுத்து அணி நியூசிலாந்து செல்ல இருக்கும் நிலையில், அந்த தொடர் மிகவும் முக்கியமானது எனவும், அதனை தொடர்ந்து சொந்த மண்ணில் நடைபெறும் தொடர்களில் சிறப்பாக செயல்பட வேண்டும் எனவும் கேப்டன் தெரிவித்தார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் குறித்த நம்பிக்கை குறித்து அவர் கூறுகையில்:
“நாங்கள் இறுதிப் போட்டிக்கு செல்வோம் என்ற நம்பிக்கை முன்பை விட இப்போதும் உள்ளது. ஃபாலோ ஆன் வழங்கிய முடிவு சரியானதே என்று நினைக்கிறேன். ஆனால் இலங்கை வீரர்கள் அந்த நெருக்கடியில் அற்புதமாக மீண்டு விளையாடி உள்ளனர். வெற்றி-தோல்வியைத் தாண்டி, டெஸ்ட் கிரிக்கெட் இந்தப் போட்டியில் உண்மையிலேயே வெற்றி பெற்றுள்ளது” என்று முடித்தார்.
இதன் மூலம் இந்தியா தொடரை வென்றாலும், WTC புள்ளிப்பட்டியலில் இந்த சமன் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பதால், இந்திய அணியின் அடுத்த கட்ட உத்திகள் மற்றும் நியூசிலாந்து தொடரே முக்கியமாகிறது.
