“அப்பா, எனக்கு வலிக்குது”: கனடா மருத்துவமனையில் 8 மணி நேர காத்திருந்த நிலையில் உயிரிழந்த இந்தியர்

கனடா மருத்துவமனை

கனடாவின் எட்மண்டன் நகரில் உள்ள கிரே நன்ஸ் மருத்துவமனையில் நடந்த மிகவும் வருந்தத்தக்க ஒரு சம்பவம் தற்போது உலகெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 44 வயதான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரசாந்த் ஸ்ரீகுமார், திடீர் நெஞ்சு வலியால் பாதிக்கப்பட்டு உடனடி மருத்துவ உதவிக்காக மருத்துவமனைக்கு வந்தாலும், சுமார் 8 மணி நேரம் காத்திருப்பு அறையில் வைக்கப்பட்டதால், உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் மாரடைப்பால் பரிதாபமாக உயிரிழந்தார்.

டிசம்பர் 22, 2025 அன்று பணியில் இருந்த போது பிரசாந்துக்குத் திடீரெனக் கடுமையான நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனடியாக அவர் கிரே நன்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரது பெயர் மட்டும் பதிவு செய்யப்பட்டது. இருப்பினும், உயிருக்கு ஆபத்தான நிலை என்பதை அதிகாரிகள் கணிக்கவில்லை. மாறாக, அவரை காத்திருப்பு அறையில் அமர வைத்தனர்.

அவரது தந்தை குமார், மகனின் நிலை குறித்து அறிந்தவுடன் மருத்துவமனைக்கு வந்தடைந்தார். அப்போது பிரசாந்த், “அப்பா, எனக்கு வலி தாங்க முடியவில்லை” என்று கதறினார். தந்தையின் கோரிக்கையின் பேரில் மருத்துவக் குழு ECG சோதனை செய்தது. ஆனால் “பெரிய பிரச்சினை இல்லை” என்று கூறி, மீண்டும் காத்திருப்பு அறைக்குத் திருப்பி அனுப்பினர்.

கனடா மருத்துவமனை

நேரம் ஓடிக் கொண்டே இருந்தது. பிரசாந்தின் வலி தொடர்ந்து அதிகரித்தது. இறுதியாக டைலெனால் மாத்திரை ஒன்று மட்டும் கொடுக்கப்பட்டது. அவரது ரத்த அழுத்தமும் கட்டுப்பாட்டை விட்டு வெளியேறியது. “என் மகனின் ரத்த அழுத்தத்தைப் பார்க்கப் பார்க்க நான் மனம் உடைந்தேன். ஆனால் யாரும் பதிலளிக்கவில்லை,” என்று தந்தை வேதனையுடன் தெரிவித்தார்.

எட்டு மணி நேரத்திற்கு மேல் காத்திருந்த பிறகுதான் பிரசாந்தை சிகிச்சை அறைக்கு அழைத்தனர். ஆனால் அவர் உள்ளே செல்ல முயன்ற போது, பத்து நொடிகளுக்குள் நெஞ்சில் கைவைத்தபடி சரிந்துவிட்டார். உடனே செவிலியர்கள் CPR உட்பட உயிர்காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். ஆனால் அனைத்து முயற்சிகளும் வீணாயின. பிரசாந்த் உயிரிழந்தார்.

அவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்த இழப்பு குடும்பத்தின் எதிர்காலத்தையே கேள்விக்குள்ளாக்கியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்த தகவல்கள் இணையத்தில் பரவியதும், பெரும் அதிர்ச்சியும் கோபமும் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், கிரே நன்ஸ் மருத்துவமனை இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ கருத்தையும் வெளியிடவில்லை. “தனிப்பட்ட நோயாளி குறித்து கருத்து தெரிவிக்க முடியாது” என்று மட்டும் மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. இந்த விவகாரத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம், கனடா போன்ற “மேம்பட்ட” நாடுகளிலும் மருத்துவ உட்கட்டமைப்பு எவ்வளவு தளர்வாக இருக்கிறது என்பதை உணர்த்துகிறது. குறிப்பாக, குடியேறிய சமூகங்கள், குடியுரிமை இல்லாதவர்கள் அல்லது சிறிய வருமான குடும்பங்கள் எதிர்கொள்ளும் மருத்துவ சவால்கள் குறித்து கேள்விகளை எழுப்புகிறது. உயிர் காப்பதற்கான அவசரச் சிகிச்சைகூட நேரத்தில் கிடைக்காமல் போவது, மருத்துவ மனிதாபிமானத்தின் வீழ்ச்சியைக் காட்டும் ஒரு கசப்பான உண்மையாக இருக்கிறது.

© 2026 Colombo Tamil | All rights reserved | Made With By WebpressHub.net