5 ஆண்டுகளுக்கு முன்பே இதய செயலிழப்பை கணிக்கும் AI: மருத்துவ உலகில் புதிய புரட்சி!

இதய செயலிழப்பை கணிக்கும் AI

மருத்துவ தொழில்நுட்பத்தில் ஒரு மைல்கல்லாக, ஒருவருக்கு இதய செயலிழப்பு ஏற்படும் அபாயத்தை ஐந்து ஆண்டுகளுக்கு முன்னரே கண்டறியும் புதிய செயற்கை நுண்ணறிவு (AI) மென்பொருளை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.

இதயத் தசைகள் பலவீனமடையும் போது, அதைச் சுற்றியுள்ள கொழுப்பு அடுக்குகளில் ஏற்படும் மிகச்சிறிய மாற்றங்களை சாதாரண CT ஸ்கேன்களால் கண்டறிய முடியாது. ஆனால், இந்த AI கருவி அத்தகைய நுணுக்கமான மாற்றங்களை ஆய்வு செய்து, நோயாளிக்கு இருக்கும் ஆபத்தை ‘ரிஸ்க் ஸ்கோர்’ (Risk Score) மூலம் துல்லியமாகத் தெரிவிக்கிறது.

இங்கிலாந்தில் உள்ள 9 மருத்துவமனைகளில் சுமார் 72,000 நோயாளிகளிடம் நடத்தப்பட்ட சோதனையில், இந்த தொழில்நுட்பம் 86% துல்லியமாக முடிவுகளை வழங்கியுள்ளது.

இந்த ஆய்வில் ‘அதிக ஆபத்து’ பிரிவில் வகைப்படுத்தப்பட்டவர்களுக்கு, அடுத்த 5 ஆண்டுகளில் இதயம் செயலிழக்கும் வாய்ப்பு மற்றவர்களை விட 20 மடங்கு அதிகமாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது பயன்பாட்டிலுள்ள CT ஸ்கேன் கருவிகளுடன் இந்த மென்பொருளை எளிதாக இணைக்க முடியும் என்பது இதன் கூடுதல் சிறப்பாகும்.

தவறான உணவு முறை, உடற்பயிற்சியின்மை மற்றும் புகையிலை பழக்கங்களால் இதய பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், குறிப்பாக இளைஞர்களிடையே ஏற்படும் திடீர் இதய செயலிழப்புகளைத் தடுக்க இந்தத் தொழில்நுட்பம் பெரும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது இந்த மென்பொருளை மருத்துவமனைகளில் அதிகாரப்பூர்வமாகப் பயன்படுத்த அனுமதி கோரப்பட்டுள்ளது. இது நடைமுறைக்கு வரும்போது, முன்கூட்டியே சிகிச்சை அளிப்பதன் மூலம் இதய நோயால் ஏற்படும் உயிரிழப்புகளைப் பெருமளவு குறைக்க முடியும் என மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

© 2026 Colombo Tamil | All rights reserved | Made With By WebpressHub.net