அல்ஜீரியாவில் கொடூரம்: குழந்தைகள் காப்பகத்தில் பயங்கர தீ விபத்து.. 11 குழந்தைகள் பரிதாபமாகப் பலி!

அல்ஜீரியாவில் கொடூரம்

வடக்கு ஆப்பிரிக்க நாடான அல்ஜீரியாவில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 11 குழந்தைகள் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்தத் துயரச் சம்பவம் அந்நாட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அல்ஜீரியாவின் தலைநகர் அல்ஜியர்ஸில் ஆதரவற்ற மற்றும் கைவிடப்பட்ட குழந்தைகளுக்கான காப்பகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான குழந்தைகள் தங்கிப் படித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த வியாழக்கிழமையன்று இந்தக் காப்பகக் கட்டடத்தில் திடீரெனப் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

தீ விபத்தின் போது காப்பக அறைகளுக்குள் சிக்கிக்கொண்ட 11 குழந்தைகள் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். மேலும், இந்த விபத்தில் சிக்கி 19 பேர் பலத்த தீக்காயங்களுக்கு உள்ளாகினர். விபத்து குறித்துத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினர், படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஏசி மின் கசிவே காரணம்: போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில், காப்பகத்தில் பொருத்தப்பட்டிருந்த குளிரூட்டி (AC) சாதனத்தில் ஏற்பட்ட திடீர் மின்சாரக் கசிவு (Short Circuit) காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இந்தத் தீ விபத்தின் பின்னணியில் வேறு ஏதேனும் அலட்சியங்கள் உள்ளதா என்பது குறித்துப் போலீஸார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

LATEST Post

© 2026 Colombo Tamil | All rights reserved | Made With By WebpressHub.net