டிரம்ப் ஈரானுக்கு ஆயுதங்கள் வழங்கும் நாடுகளுக்கு 50% வரி அறிவிப்பு

50% வரி அறிவிப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரானுக்கு ராணுவ ஆயுதங்களை வழங்கும் எந்த நாடுக்கும் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் அனைத்து பொருட்களுக்கும் உடனடியாக 50 சதவீத வரி விதிக்கப்படும் என்று தனது ட்ரூத் சோஷியல் பதிவில் அறிவித்தார். அவர் குறிப்பிட்டது போல், இதற்கு எந்தவொரு வரிவிலக்கோ சலுகையோ கிடையாது, மேலும் இந்த வரி உடனடியாக அமலுக்கு வரும்.

டிரம்பின் இந்த நடவடிக்கையின் நோக்கம் ஈரானின் பாதுகாப்பு விநியோகச் சங்கிலியைத் துண்டிப்பதாகும். இதற்கு முன்னதாக, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே 14 நாட்கள் போர் நிறுத்தம் அமலில் இருந்தபோதும், இந்த அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஈரானுக்கு ஆயுதங்கள் வழங்கும் முக்கிய நாடுகளில் ரஷ்யா, சீனா மற்றும் வட கொரியா குறிப்பிடத்தக்கவை. ரஷ்யா நவீன விமானங்கள், ஏவுகணைகள், வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் போன்ற உயர்நிலை ராணுவ உபகரணங்களை வழங்குகிறது. சீனா நேரடியாக ஆயுதங்களை வழங்குவதற்குப் பதிலாக, ட்ரோன் உற்பத்தி, ஏவுகணை எரிபொருள் மற்றும் பிற இரட்டை பயன்பாட்டு தொழில்நுட்ப ஆதரவை வழங்குகிறது. வட கொரியா ஏவுகணை தொழில்நுட்பம் மற்றும் தொடர்புடைய உபகரணங்களை வழங்கும் முக்கிய நாடாகும்.

இவை அனைத்தும் ஈரானின் ராணுவ திறனை பலப்படுத்தும் வகையில் அமைகின்றன. ஆனால் ரஷ்யா மற்றும் சீனா உலகின் பெரிய பொருளாதார வல்லரசுகள் என்பதால், 50 சதவீத வரி விதிப்பது டிரம்புக்கு சிரமமான காரியமாகும். எனவே, இந்த வரி சிறிய நாடுகளுக்கு மட்டுமே நடைமுறைப்படுத்தப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

டிரம்பின் இந்த அறிவிப்பு உலக நாடுகளுக்கு மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரானுக்கு ஆயுதம் வழங்கும் நாடுகள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு அதிக வரி செலுத்த வேண்டிய நிலை உருவாகியதால், அவர்களின் ஏற்றுமதி திறனை பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

© 2026 Colombo Tamil | All rights reserved | Made With By WebpressHub.net