‘ஜனநாயகன்’ படம் கசிவு விவகாரம்: 6 பேர் கைது – சைபர் கிரைம் போலீஸ் நடவடிக்கை

ஜனநாயகன்

நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையத்தில் கசிந்த விவகாரம் தொடர்பாக, தமிழக சைபர் கிரைம் போலீசார் 6 பேரை கைது செய்துள்ளனர்.

எச். வினோத் இயக்கத்தில் உருவான இந்தப் படம், விஜயின் கடைசி திரைப்படம் என அறிவிக்கப்பட்டதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆரம்பத்தில் பொங்கல் வெளியீடாக திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் தொடர்பான சிக்கல்களால் தள்ளிப் போனது.

பின்னர் மறு தணிக்கைக்கு அனுப்பப்பட்ட இந்த திரைப்படம், சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படத்தின் சில காட்சிகள் முதலில் சமூக வலைதளங்களில் கசிந்தன. அதனைத் தொடர்ந்து முழுப் படமும் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் திட்டமிட்டதா அல்லது தற்செயலா என்ற கேள்விகள் எழுந்த நிலையில், மத்திய அரசு தணிக்கை வாரியத்திற்கு இதில் எந்த தொடர்பும் இல்லை என்று விளக்கம் அளித்தது.

இதனைத் தொடர்ந்து, சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். தற்போது 6 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்கள் முதலில் கசிவில் ஈடுபட்டவர்களா அல்லது பின்னர் பகிர்ந்தவர்களா என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.

இந்த விவகாரம் குறித்து விரைவில் விரிவான அறிக்கை வெளியிடப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

© 2026 Colombo Tamil | All rights reserved | Made With By WebpressHub.net