டி20 உலகக் கோப்பை தொடரில் புதன்கிழமை நடைபெற்ற ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கிடையிலான போட்டி ரசிகர்களுக்கு மிகப்பெரிய திரில்லாக அமைந்தது. அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணி 6 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்தது.
இதனைத் தொடர்ந்து விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி கடைசி இரண்டு பந்துகள் மட்டுமே இருக்கும் நிலையில் 187 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் போட்டி சூப்பர் ஓவருக்கு சென்றது. முதல் சூப்பர் ஓவரும் டையில் முடிந்ததால் போட்டி இரண்டாவது சூப்பர் ஓவருக்கு நகர்ந்தது.
முதல் சூப்பர் ஓவரில் ரஹ்மத்துல்லா குர்பாஸ் மற்றும் அஸ்மத்துல்லா உமர்சாய் ஆப்கானிஸ்தான் அணிக்காக களமிறங்கினர். லுங்கி நிகிடி வீசிய ஓவரில் ஆப்கானிஸ்தான் அணி 18 ரன்கள் எடுத்தது. பின்னர் தென்னாப்பிரிக்கா அணிக்காக டெவால்ட் பிரெவிஸ் மற்றும் டேவிட் மில்லர் களமிறங்கினர். ஆப்கானிஸ்தான் அணியின் ஃபசல்ஹாக் ஃபரூக்கி வீசிய சூப்பர் ஓவரும் டையில் முடிந்தது.
இரண்டாவது சூப்பர் ஓவரில் முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்கா அணி 24 ரன்கள் எடுத்தது. இதில் டேவிட் மில்லர் தொடர்ச்சியாக சிக்ஸர்கள் அடித்து அணிக்கு முக்கியமான முன்னிலை வழங்கினார்.
தோல்வியிலும் ஹீரோ ஆன குர்பாஸ்
இரண்டாவது சூப்பர் ஓவரில் 24 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணிக்கு அஸ்மத்துல்லா உமர்சாய் மற்றும் முகமது நபி பேட்டிங் செய்ய வந்தனர். கேசவ் மகாராஜ் வீசிய ஓவரில் நபி விரைவில் அவுட்டானார்.
அதன்பின்னர் களமிறங்கிய ரஹ்மத்துல்லா குர்பாஸ் தொடர்ச்சியாக மூன்று பந்துகளில் மூன்று சிக்ஸர்கள் அடித்து ரசிகர்களை பரபரப்பில் ஆழ்த்தினார். முழு மைதானமும் அவரது ஆட்டத்திற்கு கைதட்டியது. ஆனால் கடைசி பந்தில் அவர் அவுட்டானதால் ஆப்கானிஸ்தான் அணி வெற்றியை தவறவிட்டது.
போட்டியில் தோல்வியடைந்தாலும் குர்பாஸ் காட்டிய ஆட்டம் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றுள்ளது. சமூக ஊடகங்களில் பலரும் அவரது பேட்டிங்கை பாராட்டி வருகின்றனர். சிலர் இதை இதுவரை நடைபெற்ற சிறந்த டி20 போட்டிகளில் ஒன்றாக குறிப்பிட்டுள்ளனர். இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனை பிரதிகா ராவல் உள்ளிட்ட பலரும் குர்பாஸ் தனிப்பட்ட ஆட்டத்தை பாராட்டியுள்ளனர்.


