அகமதாபாத்: 2026 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோத உள்ள நிலையில், இந்திய அணியின் பந்துவீச்சு அமைப்பு குறித்து பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக அரையிறுதியில் இங்கிலாந்துக்கு எதிராக இந்திய பந்துவீச்சாளர்கள் செயல்பட்ட விதம் அணியின் மேலாண்மைக்கு கவலையை ஏற்படுத்தியதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.
இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் இந்தியா 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாலும், அந்தப் போட்டியில் பந்துவீச்சாளர்கள் எதிர்பார்த்த அளவில் கட்டுப்பாடு காட்டவில்லை. குறிப்பாக சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தியின் செயல்பாடு கடுமையாக விமர்சிக்கப்படுகிறது.
லீக் சுற்றில் சிறப்பாக பந்துவீசிய அவர், சூப்பர் 8 சுற்றுக்குப் பிறகு தனது தாக்கத்தை இழந்ததாக கூறப்படுகிறது. இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் அவர் வீசிய 4 ஓவர்களில் 64 ரன்கள் விட்டுக்கொடுத்தார். இது டி20 உலகக் கோப்பை வரலாற்றில் ஒரு இந்திய பந்துவீச்சாளர் ஒரே போட்டியில் விட்டுக்கொடுத்த அதிகபட்ச ரன்களாக பதிவாகியுள்ளது. மேலும் சூப்பர் 8 கட்டத்தில் அவரது எகானமி 10க்கும் மேல் சென்றுள்ளது.
இதனால் எதிரணி பேட்ஸ்மேன்கள் அவரது பந்துகளை எளிதாக கணித்து தாக்குகின்றனர் என்ற விமர்சனமும் எழுந்துள்ளது. இறுதிப் போட்டி போன்ற முக்கியமான நேரத்தில் இந்த நிலை இந்திய அணிக்கு சிக்கலை ஏற்படுத்தலாம் எனவும் கூறப்படுகிறது.
அதே நேரத்தில், இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணிக்காக கட்டுப்பாடுடன் பந்துவீசியவர் ஜஸ்பிரித் பும்ரா மட்டுமே. பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளத்தில் அவர் 4 ஓவர்களில் 33 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை கைப்பற்றினார். அவரது எகானமி 6.3 ஆக இருந்தது.
ஒரே பும்ராவை மட்டுமே நம்பி இந்தியா இறுதிப் போட்டியில் களம் இறங்க முடியாது என்பதும் நிபுணர்கள் சுட்டிக்காட்டும் முக்கிய அம்சமாக உள்ளது. மற்ற பந்துவீச்சாளர்கள் ரன்களை அதிகமாக வழங்கும் நிலை தொடர்ந்தால் அது அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.
இந்த சூழலில், ஃபார்மில் இல்லாத வருண் சக்கரவர்த்திக்கு பதிலாக குல்தீப் யாதவுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற கருத்து பலரிடமும் எழுந்துள்ளது. இந்தத் தொடரில் குல்தீப் யாதவ் ஒரு போட்டியில் மட்டுமே விளையாடியிருந்தாலும், சமீப காலங்களில் அவரது பந்துவீச்சு நல்ல நிலையில் உள்ளது.
மேலும் நியூசிலாந்து அணிக்கு எதிராக குல்தீப் யாதவுக்கு நல்ல சாதனையும் உள்ளது. அவர் இதுவரை அந்த அணிக்கு எதிராக 7 போட்டிகளில் 8 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடிய திறமை அவரிடம் இருப்பதால், இறுதிப் போட்டியில் அணியில் அவரை சேர்க்க வேண்டும் என்ற ஆலோசனையும் வலுத்து வருகிறது.
கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்றால், அணியின் சமநிலையை கருத்தில் கொண்டு துணிச்சலான முடிவை இந்திய அணி மேலாண்மை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக கிரிக்கெட் வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.









