“இதற்கு மேல் விளையாட விரும்பல” – ஓய்வு குறித்து திடீரென பேசிய ரோஹித் சர்மா! நடந்தது என்ன?

பகிர்
WhatsApp Google News Facebook Post Telegram

2023 ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்த பிறகு, அதன் தாக்கம் இந்திய அணித் தலைவர் ரோஹித் சர்மாவை உளவியல் ரீதியாக ஆழமாக பாதித்தது. அந்தத் தோல்வியை ஏற்க முடியாமல், கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்ததாகவும், “இதற்கு மேலும் விளையாட விரும்பவில்லை” என்று மனம் கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது வெளியான ஒரு பேட்டியில், ரோஹித் சர்மா அந்த காலகட்டத்தின் உணர்வுகளை நினைவு கூர்ந்து பேசியுள்ளார். “2023 உலகக் கோப்பை பைனலில் தோல்வி என்னை மனச்சோர்வில் ஆழ்த்தியது. உடனே ஓய்வு பெற நினைத்தேன்” என்று அவர் கூறினார்.

ரோஹித் சர்மா
படம்: “இதற்கு மேல் விளையாட விரும்பல” – ஓய்வு குறித்து திடீரென பேசிய ரோஹித் சர்மா! நடந்தது என்ன?

ஆனால், அடுத்த ஆண்டு நடைபெற்ற 2024 டி20 உலகக் கோப்பை தொடர் அவருக்கு புதிய வெறியைத் தந்தது. “எங்கள் அணி அந்தக் கோப்பையை வென்றது. அது எனக்கு மன நிறைவைத் தந்தது. கோப்பை என்பதுதான் எனக்கு முக்கியம் – அது ஒருநாளா, டி20வா என்பது முக்கியமில்லை” என்றார் அவர்.

இப்போது, அவரது கவனம் 2027 ஒருநாள் உலகக் கோப்பை மீது திரும்பியுள்ளது. “அந்தக் கோப்பையையும் வென்றால், திருப்தியுடன் ஓய்வு பெறுவேன்” என்று தெளிவாக அறிவித்துள்ளார். அதற்காக தீவிரமாக பயிற்சி செய்து வருவதாகவும், குறிப்பாக பிட்னஸ் மீது அதிக கவனம் செலுத்தி வருவதாகவும் ரோஹித் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் சதம் அடித்து தனது தகுதியை நிரூபித்த ரோஹித், தனது இருப்பை பிசிசிஐ மற்றும் ரசிகர்களுக்கு நினைவூட்டியுள்ளார். மேலும், விராட் கோலி அல்லது ரோஹித் போன்ற நிலையான நட்சத்திரங்களை ஒருநாள் அணியில் இருந்து நீக்கினால், ரசிகர்களின் போராட்டம் மற்றும் பார்வையாளர் ஆதரவின் வீழ்ச்சி போன்ற பல பிரச்சினைகள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், 2027 உலகக் கோப்பைக்கு அவர்களுக்கு இடம் கொடுக்கப்படும் என்றே கருதப்படுகிறது.

அடுத்தகட்டமாக, இந்திய அணி ஜனவரி 11 முதல் நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்க உள்ளது. இந்தத் தொடர் ரோஹித் சர்மாவின் பிட்னஸ் மற்றும் அணியில் தொடர்ந்து இருப்பதற்கான அவரது வாய்ப்புகளை தீர்மானிக்கும் முக்கியமான கட்டமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூலம்: Colombo Tamil · திருத்தம் வேண்டுமா? எங்களுக்குத் தெரிவிக்கவும்