டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்திய அணி தனது அடுத்த போட்டியில் நமீபியா அணியை வரும் 12ஆம் தேதி எதிர்கொள்ள உள்ளது. இந்தப் போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவுக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த போட்டியில் கேப்டன் சூர்யகுமார் யாதவ் 49 பந்துகளில் 10 பவுண்டரிகளும் 4 சிக்சர்களும் அடித்து 84 ரன்கள் எடுத்தார். அவரது அதிரடி ஆட்டம் இந்திய அணிக்கு வெற்றியை பெற்றுத்தந்தது.
ஆனால் அந்த போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அபிஷேக் சர்மா டக் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். அதேபோல் இஷான் கிஷன் மற்றும் திலக் வர்மா ஆகியோரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை.
நமீபியாவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணியில் மூன்று முக்கிய மாற்றங்கள் இடம்பெற வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காய்ச்சலால் அவதிப்படும் அபிஷேக் சர்மாவுக்கு ஓய்வு வழங்கப்படலாம். அவருக்கு பதிலாக சஞ்சு சாம்சன் அணியில் இடம் பெற வாய்ப்பு உள்ளது.
மேலும், அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் காய்ச்சல் காரணமாக விளையாடாத ஜஸ்பிரித் பும்ரா மீண்டும் அணியில் சேர வாய்ப்பு உள்ளது. இதனால் முகமது சிராஜ் நீக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சிராஜ் அந்த போட்டியில் சிறப்பாக பந்து வீசி மூன்று விக்கெட்டுகள் எடுத்திருந்தாலும், அர்ஷ்தீப் சிங் தொடர்ந்து நல்ல செயல்பாட்டில் இருப்பதால் அணித் தேர்வில் மாற்றம் ஏற்படலாம்.
இதற்கிடையில், காயம் காரணமாக நீண்ட காலமாக அணியில் இடம்பெறாத தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் மீண்டும் அணியில் சேர வாய்ப்பு உள்ளது. அவரை அணியில் சேர்க்க ஆல்ரவுண்டர் ஷிவம் துபே நீக்கப்படலாம் என கூறப்படுகிறது.
நமீபியாவுக்கு எதிரான போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன்: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா, ரிங்கு சிங், அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், வருண் சக்கரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா மற்றும் அர்ஷ்தீப் சிங்.


