‘கௌரி’ சீரியல் நடிகை நந்தினி உயிரிழப்பு – இளம் கதாநாயகிக்கு ஏற்பட்ட எதிர்பாராத முடிவு

சீரியல் நடிகை நந்தினி

கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘கௌரி’ சீரியலில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த நடிகை நந்தினி, பெங்களூருவில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொலைக்காட்சி மற்றும் சின்னத்திரை உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

‘கௌரி’ சீரியலில் துர்கா – கனகா என இரட்டை வேடங்களில் நடித்த நந்தினி, தனது நடிப்புத் திறமையால் ரசிகர்களிடையே குறிப்பிடத்தக்க பாராட்டைப் பெற்றிருந்தார். ஆந்திராவைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், கன்னட சீரியல்களின் மூலம் நடிப்புலகில் அடியெடுத்து வைத்து, பின்னர் தமிழில் ‘கௌரி’ சீரியல் மூலம் பிரபலமானார்.

கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட ‘கௌரி’ சீரியலின் ஷூட்டிங் தொடக்கத்தில் முழுமையாக பெங்களூருவில் நடைபெற்றதால், நந்தினி அங்கேயே வசித்து வந்தார். சமீபத்தில் படப்பிடிப்பு சென்னைக்கு மாற்றப்பட்ட நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் சென்னையில் நடைபெற்ற ஷூட்டிங்கில் கலந்து கொண்ட இவர், பின்னர் பிரேக் காரணமாக பெங்களூரு திரும்பியுள்ளார். இந்நிலையில், நேற்று இரவு அவர் தங்கியிருந்த அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை தற்கொலைக்கான காரணம் குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. ‘கௌரி’ சீரியலில் இவருடன் இணைந்து நடித்த நடிகர் சதீஷ், “எப்போதும் கலகலப்பாக இருப்பவர். சமீபத்தில் கூட ஷூட்டிங்கில் மிகவும் உற்சாகமாக நடித்தார். இரட்டை வேடம் என்பதால் கூடுதல் பொறுப்புடன் செயல்பட்டார். இவ்வளவு பெரிய முடிவை எடுப்பார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. யூனிட்ல எல்லாருக்குமே இது பெரிய ஷாக்” எனத் தெரிவித்துள்ளார்.

இளம் வயதிலேயே சின்னத்திரையில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிய நந்தினி, உணர்ச்சிப்பூர்வமான மற்றும் வலிமையான காட்சிகளில் காட்டிய இயல்பான நடிப்புக்காக ரசிகர்களிடையே பாராட்டப்பட்டார். இன்னும் திருமணம் ஆகாத இவர், நடிப்பில் முழுமையாக ஈடுபட்டு வந்தவர். எதிர்காலத்தில் மேலும் பல வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த துயர சம்பவம் நடந்துள்ளது சின்னத்திரை உலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து ‘கௌரி’ சீரியல் யூனிட் உறுப்பினர்கள் மற்றும் சக நடிகர்கள் சிலர் பெங்களூரு சென்றுள்ளனர். சமூக வலைதளங்களில் பலரும் நந்தினிக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ரசிகர்கள், திறமைமிக்க இளம் நடிகையை தமிழ் சின்னத்திரை இழந்துவிட்டதாக வேதனை தெரிவித்து வருகின்றனர்.

இதற்கு முன்னர், விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் நடித்த நடிகை ராஜேஸ்வரி தற்கொலை செய்திருந்த நிலையில், இப்போது நந்தினியின் மரணம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் மீண்டும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

மன அழுத்தம் அல்லது மன வேதனை போன்ற பிரச்சினைகள் யாருக்கும் எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம். அப்படியான உணர்வுகள் ஏற்படும்போது, தனிமையில் மூழ்காமல், குடும்பத்தினரோ அல்லது மனநல ஆலோசகர்களிடமோ உதவி கேட்பது மிகவும் அவசியம்.

© 2026 Colombo Tamil | All rights reserved | Made With By WebpressHub.net