3,000 ஆண்டுகள் பழமையான நகையா? ஹாலிவுட் நடிகை ஜெண்டயாவுக்குக் குவியும் கண்டனங்கள்!

ஹாலிவுட் நடிகை

பிரபல ஹாலிவுட் நடிகை ஜெண்டயா (Zendaya), தோராயமாக 3,000 ஆண்டுகள் பழமையான ஈரானிய தொல்பொருட்களால் செய்யப்பட்ட காதணிகளை ஆடை அலங்காரமாக அணிந்து வந்ததற்காக தற்போது சர்வதேச அளவில் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார்.

பிரபல இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தி ஒடிஸி’ (The Odyssey) திரைப்படத்தின் விளம்பர தூதுவர் (Promotion) நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஜெண்டயா லண்டன் வந்திருந்தார். இந்த நிகழ்வின் போது, அவர் ஒரு பிரத்தியேகமான வெள்ளை நிற ஜாக்மஸ் (Jacquemus) ஆடையும், அதற்குப் பொருத்தமாகப் பண்டைய ஈரானிய தங்கப் பதக்கங்களால் வடிவமைக்கப்பட்ட அரிய காதணிகளையும் அணிந்து ரெட் கார்பெட்டில் வலம் வந்தார்.

நெருக்கடிக்குக் காரணமான இந்தக் காதணிகள், கிட்டத்தட்ட 3000 ஆண்டுகள் பழமையான வரலாற்றுச் சிறப்புமிக்க ஈரானிய தொல்பொருட்களை (Artifacts) உருமாற்றி உருவாக்கப்பட்டவை என்று கூறப்படுக்கிறது. ஒரு நாட்டின் கலாசாரப் பாரம்பரியமிக்க மற்றும் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட வேண்டிய அரிய வரலாற்றுப் பொக்கிஷங்களை, ஒரு பிரபலத்தின் தற்காலிக ஆடை அலங்காரத்திற்காகப் பயன்படுத்தியது எந்த வகையில் நியாயம் என்ற கேள்வியை எழுப்பி, தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களும் வரலாற்று ஆர்வலர்களும் சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

ஜெண்டயா அணிந்திருந்த இந்த அரிய காதணிகளின் புகைப்படங்கள் இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வரும் நிலையில், “வரலாற்றுப் பொருட்கள் இவ்வாறு சிதைக்கப்படக் கூடாது” என்ற எதிர்ப்புகளும், “இது பழங்காலக் கலையை உலகிற்குப் பறைசாற்றுகிறது” என்ற ஆதரவுக் கருத்துகளும் என நெட்டிசன்கள் மத்தியில் விவாதங்கள் அனல் பறந்து வருகின்றன.

LATEST Post

© 2026 Colombo Tamil | All rights reserved | Made With By WebpressHub.net