பிரபல இயக்குநர் குணசேகர் இயக்கத்தில், சாரா அர்ஜுன் மற்றும் பூமிகா சாவ்லா நடிப்பில் ஓடிடியில் வெளியாகியுள்ள ‘யுபோரியா’ திரைப்படம் தற்கால இளைஞர்களின் நன்னெறிச் சிதைவை மையமாகக் கொண்டு ஒரு அதிர்வூட்டும் சமூக விழிப்புணர்வுப் படைப்பாக உருவாகியுள்ளது.
ஐதராபாத்தில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட இக்கதை, சிவில் சர்வீஸ் தேர்வுக்குத் தயாராகும் சைத்ரா என்ற பெண் ஒரு பார்ட்டியில் செல்வாக்கு மிக்க இளைஞர்களால் பாலியல் வன்புணர்வு செய்யப்படுவதில் இருந்து தொடங்குகிறது.
குற்றவாளியான விகாஸின் தாய் விந்தியா, பாசத்தை விட நீதியே முக்கியம் எனத் தன் மகனுக்கு எதிராகத் துணிந்து நிற்பதும், சைத்ராவின் சட்டப் போராட்டமும், குற்றவாளிகளின் சிறை வாழ்க்கையுமே படத்தின் முதன்மை திரைக்கதையாக நகர்கிறது.
இப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சாரா அர்ஜுன், பாதிக்கப்பட்ட பெண்ணின் வலியையும் மீண்டு வரும் தைரியத்தையும் மிக முதிர்ச்சியான நடிப்பால் கண்முன்னே நிறுத்துகிறார்.
அதேபோல் தார்மீகக் குற்ற உணர்ச்சியில் தவிக்கும் தாயாக பூமிகா சாவ்லா உணர்வுப்பூர்வமான பங்களிப்பை வழங்கியுள்ளார். பெற்றோர்களின் வளர்ப்பு முறை மற்றும் போதைப்பொருள் கலாச்சாரம் குறித்து படம் மிக அழுத்தமாகப் பேசுவதோடு, காலா பைரவாவின் பின்னணி இசை படத்தின் பதற்றமான சூழலை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துகிறது.
இருப்பினும் முதல் பாதியின் விறுவிறுப்பு இரண்டாம் பாதியில் சற்று குறைந்து திரைக்கதை தொய்வடைவது பலவீனமாகப் பார்க்கப்படுகிறது. மேலும் கொடூரக் குற்றவாளிகளுக்கு மன்னிப்பும் மறுவாழ்வும் அளிக்க வேண்டும் என்ற இயக்குநரின் பார்வை பார்வையாளர்கள் மத்தியில் பெரும் விவாதங்களை எழுப்பியுள்ளது.
சில இழுவைகளைத் தவிர்த்தால், ‘யுபோரியா’ வெறும் பொழுதுபோக்குத் திரைப்படம் அல்லாமல் தற்காலச் சமூகத்திற்கான ஒரு எச்சரிக்கை மணியாக அமைந்துள்ளதால் குடும்பத்துடன் விழிப்புணர்வுக்காகப் பார்க்க வேண்டிய ஒரு முக்கிய படைப்பாக மாறுகிறது.
எங்கள் ரேட்டிங்: 3.5 / 5
மேலும் செய்திகள்




