18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் கோப்பையை வென்ற பெங்களூரு அணியின் வீரர்களுக்கு கர்நாடக அரசு சார்பில் பெங்களூரு விதானசவுதாவில் பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
லட்சக்கணக்கான பேர் விதானசவுதா முன்பு குவியத் தொடங்கிய நிலையில் திடீரென மாலை 3 மணியளவில் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி பாராட்டு விழா சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
விதானசவுதா முன்பு குவிந்திருந்த லட்சக்கணக்கானோர் கிரிக்கெட் மைதானத்தை நோக்கி புறப்பட்டதுடன், பெங்களூரு நகரின் நாலா திசைகளில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் கிரிக்கெட் ஸ்டேடியத்தை நோக்கி படையெடுத்தனர்.
அத்துடன், சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறும் பாராட்டு விழாவில் பங்கேற்க இலவச பாஸ் ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் என்ற வதந்தி பரவியதால், லட்சக்கணக்கானோர் பாஸ் பதிவிறக்கம் செய்து ஸ்டேடியத்துக்கு திரண்டனர்.
சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் பார்வையாளர் கேலரியில் உள்ள 35,000 இருக்கைகளில்5 ஆயிரம் இருக்கைகள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கும், வி.ஐ.பி.க்களுக்கும் ஒதுக்கப்பட்டிருந்தது.
30 ஆயிரம் இருக்கைகள் மட்டுமே ரசிகர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் விளையாட்டு மைதானத்தில் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் திரண்டதால் கடுமையான நெரிசல் ஏற்பட்டது.
இந்த நெரிசலில் 2 குழந்தைகள் சம்பவ இடத்திலேயே இறந்ததுடன், 9 பேர் மருத்துவமனையில் இறந்தனர். மேலும் 70-க்கும் மேற்பட்டோர் மூச்சு திணறல் மற்றும் காயம் அடைந்தனர்.
கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால், போலீசார் ஒலிபெருக்கிகள் மூலம் மைதானத்தை விட்டு வெளியேறுமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தனர்.
கூட்டத்தை கலைக்க தடியடி நடத்தப்பட்டது. இதனால் மக்கள் பயந்து ஓடினார்கள். இதில் ஒரு பலகை இடிந்து விழுந்தது. இதனால் மக்கள் வெவ்வேறு திசைகளில் ஓட தொடங்கியதால் விபத்து ஏற்பட்டது.
காயமடைந்த பெண்கள், குழந்தைகள் உள்பட 70-க்கும் மேற்பட்டோர் சிவாஜிநகரில் உள்ள வைதேஹி மருத்துவமனை, பவுரிங் மற்றும் லேடி கர்சன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
35ஆயிரம் பேர் அமர வேண்டிய இடத்தில் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் திரண்டதாலும், இலவச பாஸ் வதந்தி, போதிய போலீஸ் பாதுகாப்பு மற்றும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளாததே இந்த சம்பவத்துக்கு காரணம் என்று தெரிய வந்துள்ளது.