வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 92 ஓட்டங்களில் ஆட்டமிழந்தது ஏமாற்றமளிப்பதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சதத்தை நெருங்கிய தருணத்தில் ரோஹித் ஆட்டமிழந்த நிலையில், கவாஸ்கர் தனது கிரிக்கெட் வாழ்க்கையின் அனுபவங்களை நினைவுகூர்ந்து இக்கருத்தைப் பகிர்ந்துள்ளார்.
ரோஹித் சர்மா 2027 ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற வாய்ப்புள்ளது என்று குறிப்பிட்ட கவாஸ்கர், அவர் ஓய்வுபெறும் போது அவரது வயதை விட அதிக எண்ணிக்கையில் ஒருநாள் சதங்கள் இருக்க வேண்டும் என்பதே தனது தனிப்பட்ட விருப்பம் என்றார்.
மூன்றாவது போட்டியில் சதம் அடித்திருந்தால் அவர் தனது 36-வது ஒருநாள் சதத்தைப் பதிவு செய்து அந்த இலக்கை நோக்கி நகர்ந்திருப்பார் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஒரு வீரர் விடைபெறும் போது அவரது வயதை விட சதங்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது தனித்துவமானது என்று விளக்கிய கவாஸ்கர், தனது கிரிக்கெட் வாழ்க்கையின் கடைசி ஆண்டில் தாமும் தனது வயதிற்கு நிகரான டெஸ்ட் சதங்களை அடிக்க விரும்பியதாகக் கூறினார்.
எனினும், மூன்று முறை 90-களில் ஆட்டமிழந்ததால், ஓய்வுபெற்ற 38 வயதை எட்டும் வகையில் சதங்களை எட்ட முடியாமல் போனதாக அவர் நினைவுகூர்ந்தார்.
