கடும் வெப்ப அலை கர்ப்பிணிப் பெண்களுக்கும் பச்சிளம் குழந்தைகளுக்கும் தீவிர சுகாதாரப் பாதிப்புகளை ஏற்படுத்துவதாக ஐக்கிய நாடுகள் சபையின் பருவநிலைப் பிரிவுத் தலைவர் சைமன் ஸ்டீல் எச்சரித்துள்ளார்.
கர்ப்ப காலத்தில் அதீத வெப்பத்தின் தாக்கத்துக்கு உள்ளாவது குறைப்பிரசவம், கருவிலேயே சிசு உயிரிழப்பது மற்றும் பிறக்கும் குழந்தை குறைந்த எடையுடன் இருப்பது உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களுக்கு வழிவகுப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரிட்டன், ஆஸ்திரேலியா, இந்தியா, பிரேசில், சிம்பாப்வே ஆகிய ஐந்து நாடுகளில் பணியாற்றும் 1,000 மருத்துவர்கள் மற்றும் தாதியரிடம் இது தொடர்பான கருத்தாய்வு முன்னெடுக்கப்பட்டது.
இதில் பங்கேற்ற சுகாதாரப் பணியாளர்கள் அனைவரும் கடும் வெப்பத்தால் பாதிக்கப்பட்ட தாய்மார்கள் அல்லது பச்சிளம் குழந்தைகளுக்குச் சிகிச்சையளித்திருப்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.
மேலும், மூன்றில் ஒரு சுகாதாரப் பணியாளர், வெப்பத் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளிடம் வளர்ச்சிக் குறைபாடு, உணவு உட்கொள்வதில் சிரமம் மற்றும் நீர்ச்சத்துக் குறைபாடு போன்ற தீவிர பாதிப்புகளைக் கண்டறிந்ததாகத் தெரிவித்துள்ளனர்.
