பிரித்தானியாவில் முதன்முறையாக ஒரு லிட்டர் டீசல் விலை இரண்டு பவுண்டுகளைத் தொட்டு புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக ராயல் ஆட்டோமொபைல் கிளப் (RAC) தெரிவித்துள்ளது.
வாகனக் காப்பீடு மற்றும் பராமரிப்பு சேவைகளை வழங்கி வரும் இந்த அமைப்பின் தரவுகளின்படி, அந்நாட்டில் தற்போது ஒரு லிட்டர் டீசல் சராசரியாக 200.01 பென்ஸ் (2.00 பவுண்டுகள்) என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
டீசல் மட்டுமின்றி பெட்ரோல் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருவதாகவும், தற்போது ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 174.71 பென்ஸாக (1.74 பவுண்டுகள்) அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் விலைகள் இப்போதைக்கு குறைய வாய்ப்பில்லை என்று சுட்டிக்காட்டியுள்ள RAC அமைப்பு, இந்தத் தொடர் உயர்வு வாகன ஓட்டிகளுக்குக் கடுமையான நிதிச்சுமையை ஏற்படுத்தியுள்ளதாகக் கவலை தெரிவித்துள்ளது.
இதனிடையே, டீசல் விலை வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கக்கூடும் என்று கணிக்கப்பட்டாலும், நாட்டில் டீசல் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சம் தேவையில்லை என பிரித்தானிய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
