அமெரிக்காவின் கிழக்குக் கரையை தாக்கிய நோர்ஈஸ்டர் புயல்: நியூயோர்க், நியூஜேர்சியில் அவசரகால நிலை பிரகடனம்

நோர்ஈஸ்டர் புயல்

அமெரிக்காவின் வடகிழக்கு பிராந்தியத்தை உலுக்கியுள்ள சக்திவாய்ந்த ‘நோர்ஈஸ்டர்’ (Nor’easter) புயல் காரணமாக பாரிய அளவில் கரையோர வெள்ளப்பெருக்கு, மின்சார விநியோகத்தடை மற்றும் போக்குவரத்து பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதை அடுத்து நியூயோர்க் மற்றும் நியூஜேர்சி மாகாணங்களில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

கடும் காற்று, இடைவிடாது பெய்து வரும் அடைமழை மற்றும் கடல் அலைகளின் சீற்றம் காரணமாக அப்பகுதிகளிலுள்ள பல மில்லியன் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

நியூயோர்க் நகரத்தின் கரையோரப் பகுதிகள், லோங் ஐலண்ட் மற்றும் நியூஜேர்சியின் கரையோரப் பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதாக அமெரிக்க தேசிய வானிலை சேவை திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

புயலின் தாக்கத்தினால் வீசிய கடும் காற்று காரணமாக மரங்களும் மின்கம்பங்களும் முறிந்து வீழ்ந்ததில் மாசசூசெட்ஸ், நியூயோர்க், நியூஜேர்சி உள்ளிட்ட பகுதிகளில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான குடும்பங்களுக்கான மின் விநியோகம் முற்றாகத் துண்டிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நியூயோர்க்கின் புரூக்ளின் பகுதியில் மரம் முறிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புயல் நிலைமையை கருத்திற்கொண்டு, அமெரிக்க பெடரல் விமானப் போக்குவரத்து நிர்வாகத்தின் வழிகாட்டலின் கீழ் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதுடன், ஆயிரக்கணக்கான விமான சேவைகள் பல மணிநேர தாமதங்களை எதிர்கொண்டுள்ளன.

மேலும், நியூயோர்க் சென்ட்ரல் பார்க்கில் நடைபெறவிருந்த சர்வதேச இசை நிகழ்வுகள் மற்றும் பொஸ்டன் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரபல பாடகர் எட் ஷீரனின் இசை நிகழ்ச்சி உள்ளிட்ட முக்கிய பொது நிகழ்வுகள் பாதுகாப்பு காரணங்களுக்காக இரத்து செய்யப்பட்டுள்ளன.

நிலைமை மோசமடைந்து வருவதையடுத்து, அவசிய தேவைகளின்றி பொதுமக்கள் வீதிகளைப் பயன்படுத்துவதை தவிர்க்குமாறும், வெள்ள நீர் தேங்கியுள்ள வீதிகள் ஊடாக பயணிக்க வேண்டாம் எனவும் நியூயோர்க் மற்றும் நியூஜேர்சி அதிகாரிகளினால் அவசர அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன.

தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளதுடன், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் அவசரகால அனர்த்த முகாமைத்துவப் பிரிவினர் தீவிரமாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் .

Advertisement