கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள ஹமில்டன் நகரில் கத்திக்குத்து காயங்களுடன் மீட்கப்பட்ட 21 வயதான இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
ஹமில்டன் காவல்துறையின் தகவலின்படி, இன்று அதிகாலை சுமார் 2.30 மணியளவில் மெயின் ஸ்ட்ரீட் வெஸ்ட் மற்றும் ஃபிரிட் ஸ்ட்ரீட் சந்திப்புக்கு அருகில் இளைஞர் ஒருவர் படுகாயங்களுடன் கிடப்பதை டாக்ஸி ஓட்டுநர் ஒருவர் அவதானித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்த அவசர சேவைப் பிரிவினர், கத்திக்குத்து காயங்களுடன் இருந்த இளைஞரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். எனினும், அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் அவர் உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
முதற்கட்ட விசாரணைகளின்படி, உயிரிழந்த இளைஞர் மெயின் ஸ்ட்ரீட் பகுதியில் காயங்களுடன் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்னர், கிங் ஸ்ட்ரீட் வெஸ்ட் மற்றும் பாரடைஸ் ரோடு நார்த் பகுதிக்கு அருகில் மற்றொரு நபர் அல்லது குழுவினருடன் தகராறில் ஈடுபட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இந்த சம்பவத்திற்கான முழுமையான காரணம் மற்றும் தொடர்புடைய நபர்கள் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் அல்லது கத்திக்குத்துக்கு முன்னர் இடம்பெற்றதாகக் கூறப்படும் தகராறு தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் முன்வந்து விசாரணைக்கு உதவுமாறு பொலிஸார் கோரியுள்ளனர். தகவல் உள்ளவர்கள் புலனாய்வு அதிகாரி அலேக்ஸ் பக்கை 905-546-4123 என்ற தொலைபேசி இலக்கத்தில் தொடர்புகொள்ளலாம்.
அதேபோல், இன்று அதிகாலை 2.00 மணி முதல் 2.45 மணி வரையான காலப்பகுதியில் சம்பவம் இடம்பெற்ற பகுதிகளில் வாகனங்களில் பயணித்தவர்களிடமும் பொலிஸார் உதவி கோரியுள்ளனர். அந்த நேரத்தில் பதிவான டாஷ்கேம் அல்லது பிற காணொளிப் பதிவுகள் இருந்தால், அவற்றை காவல்துறையிடம் வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.
மேலும் செய்திகள்




