U19 உலகக்கோப்பையில் வைபவ் சூர்யவன்ஷி அதிரடி: 175 ரன்கள் மூலம் பல சாதனைகள் முறியடிப்பு

வைபவ் சூர்யவன்ஷி

U19 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இளம் தொடக்க வீரர் வைபவ் சூர்யவன்ஷி அதிரடியான ஆட்டத்தால் கிரிக்கெட் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளார். அவர் வெறும் 55 பந்துகளில் சதம் அடித்து புதிய வரலாறு படைத்ததுடன், அவரது ஆட்டம் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவின் ஆட்டத்தை நினைவூட்டும் வகையில் இருந்ததாக ரசிகர்கள் பாராட்டுகின்றனர்.

இறுதிப்போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி 175 ரன்கள் குவித்து அணிக்கு வலுவான முன்னிலை பெற்றுத் தந்தார். தனது இன்னிங்ஸில் 15 சிக்ஸர்கள் அடித்து, U19 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற புதிய சாதனையை உருவாக்கினார். அதேபோல், இறுதிப்போட்டியில் அடிக்கப்பட்ட அதிவேக சதமாகவும் அவரது சாதனை பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த தொடரில் வைபவ் சூர்யவன்ஷி சிறப்பான நிலைத்தன்மையுடன் விளையாடி, 7 போட்டிகளில் ஒரு சதம் மற்றும் மூன்று அரைசதங்களுடன் மொத்தம் 439 ரன்கள் எடுத்துள்ளார். இதன் மூலம் நடப்பு தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்துள்ளது.

சதம் அடித்த பிறகும் தனது அதிரடியை தொடர்ந்த அவர், வெறும் 71 பந்துகளில் 150 ரன்களை கடந்துள்ளார். இது U19 சர்வதேச கிரிக்கெட்டில் புதிய சாதனையாக பார்க்கப்படுகிறது. மேலும், இந்த உலகக்கோப்பை தொடரில் மொத்தம் 30 சிக்ஸர்கள் அடித்து சிக்ஸர் மன்னனாகவும் திகழ்கிறார். இதில் 15 சிக்ஸர்கள் இறுதிப்போட்டியிலேயே அடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

© 2026 Colombo Tamil | All rights reserved | Made With By WebpressHub.net