ஜிம்பாப்வே ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப்பில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை 2026 இறுதிப்போட்டியில் இந்திய அணி அபாரமான ஆட்டத்தால் இங்கிலாந்தை 100 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்துள்ளது. இந்த வெற்றியின் மூலம் இந்தியா 6வது முறையாக U19 உலகக்கோப்பை பட்டத்தை கைப்பற்றியுள்ளது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடியான இன்னிங்ஸால் 411 ரன்கள் என்ற பெரிய இலக்கை நிர்ணயித்தது. பின்னர் பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்பட்டு இங்கிலாந்தை கட்டுப்படுத்தியது.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த இந்திய அணிக்கு தொடக்க வீரர் வைபவ் சூர்யவன்ஷி வலுவான அடித்தளத்தை அமைத்தார். அவர் வெறும் 80 பந்துகளில் 175 ரன்கள் குவித்து இங்கிலாந்து பந்துவீச்சாளர்களை சிரமப்படுத்தினார். அவரது இன்னிங்ஸில் 15 பவுண்டரிகளும் 15 சிக்ஸர்களும் இடம்பெற்றன. U19 உலகக்கோப்பை இறுதிப்போட்டிகளில் அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் என்ற சாதனையையும் அவர் படைத்தார். 2012ஆம் ஆண்டு உன்முக்த் சந்த் பதிவு செய்த 111 ரன்கள் சாதனையை இதன் மூலம் அவர் முறியடித்தார். வைபவ் மற்றும் ஆயுஷ் இரண்டாவது விக்கெட்டுக்கு 142 ரன்கள் கூட்டணி அமைத்து அணியின் ஸ்கோரைக் உயர்த்தினர்.
50 ஓவர்களில் இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 411 ரன்கள் குவித்தது. ஆண்களுக்கான 50 ஓவர் ஐசிசி தொடர் இறுதிப்போட்டிகளில் இது அதிகபட்ச ஸ்கோராகும். இதற்கு முன்பு 2003 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா இந்தியாவுக்கு எதிராக அடித்த 359 ரன்களே சாதனையாக இருந்தது. இந்திய அணிக்காக ஆயுஷ் 53 ரன்கள், அபிக்யான் குந்து 40 ரன்கள் மற்றும் கனிஷ்க் சவுகான் 37 ரன்கள் எடுத்து அணியின் மொத்தத்தை உயர்த்தினர்.
412 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி ஆரம்பத்திலிருந்தே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஒரு கட்டத்தில் 183 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது. பின்னர் கைலெப் பால்கனர் போராட்டமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஜேம்ஸ் மிண்டோவுடன் இணைந்து 92 ரன்கள் கூட்டணி அமைத்தார். இருப்பினும், இங்கிலாந்து அணி 40.2 ஓவர்களில் 311 ரன்களுக்கு ஆட்டமிழந்ததால் இந்தியா 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி ஒரு போட்டியிலும் தோல்வி சந்திக்காமல் சிறப்பாக விளையாடியது. 2000, 2008, 2012, 2018 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளுக்கு பிறகு தற்போது 2026ஆம் ஆண்டில் ஆறாவது முறையாக கோப்பையை கைப்பற்றியுள்ளது. இதற்கு முன்பும் 2022 இறுதிப்போட்டியில் இந்தியா இங்கிலாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றது. இங்கிலாந்து அணி இதுவரை 1998ஆம் ஆண்டு ஒருமுறை மட்டுமே U19 உலகக்கோப்பையை வென்றுள்ளது.
மேலும் செய்திகள்





