பிரமாண்ட சாதனை படைக்க தயாராகும் ரோஹித் சர்மா: ஒருநாள் கிரிக்கெட்டில் புதிய மைல்கல்!

ரோஹித் சர்மா

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் நட்சத்திர பேட்ஸ்மனுமான ரோஹித் சர்மா, டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த பிறகும், ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் தொடர்ந்து கவனம் செலுத்தி விளையாடி வருகிறார். தற்போது 38 வயதை எட்டியுள்ள ரோஹித், 2027 ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஒருநாள் உலகக் கோப்பை தொடருடன் தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம் என்ற முடிவில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த காரணத்தினால், ஒவ்வொரு ஒருநாள் போட்டியையும் மிகுந்த முக்கியத்துவத்துடன் அணுகும் ரோஹித் சர்மா, தொடர்ந்து தனது உடற்தகுதியிலும் கவனம் செலுத்தி வருகிறார். உடல் எடையை குறைத்து, பிட்னஸ் மீதான கவனத்தை அதிகரித்துள்ள அவர், அடுத்த ஆண்டு வரை முழு உடல் தகுதியுடன் விளையாடுவதே தனது இலக்காக வைத்துள்ளார்.

சமீபத்தில் நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில், ரோஹித் சர்மா 29 பந்துகளை எதிர்கொண்டு 3 பவுண்டரி, 2 சிக்ஸர் உடன் 26 ரன்கள் எடுத்தார். அவர் பெரிய ஸ்கோர் எடுக்கவில்லை என்றாலும், அவரது பேட்டிங் ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் பாராட்டைப் பெற்றது.

இந்த நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ரோஹித் சர்மா ஒரு மாபெரும் சாதனையை நிகழ்த்தும் தருணம் நெருங்கியுள்ளது. சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் தற்போது ஒன்பதாவது இடத்தில் உள்ள ரோஹித், தென்னாப்பிரிக்காவின் முன்னாள் ஜாம்பவான் ஜாக் காலிஸ்-ஐ பின்னுக்கு தள்ளும் வாய்ப்பில் உள்ளார்.

2007 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமான ரோஹித் சர்மா, இதுவரை 280 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 33 சதங்கள் மற்றும் 61 அரைசதங்களுடன் 11,542 ரன்களை குவித்துள்ளார். இதே சமயம், ஜாக் காலிஸ் 328 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 11,579 ரன்கள் எடுத்துள்ளார். காலிஸின் இந்த சாதனையை முறியடிக்க ரோஹித் சர்மாவிற்கு தற்போது வெறும் 38 ரன்கள் மட்டுமே தேவை.

அதனால், நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ரோஹித் 38 ரன்களை கடந்தால், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் எட்டாவது இடத்தை பிடித்து, ஜாக் காலிஸை பின்னுக்கு தள்ளுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

© 2026 Colombo Tamil | All rights reserved | Made With By WebpressHub.net