லண்டன் வெம்ப்லியில் உள்ள பிரென்ட் சிவிக் சென்டர் கட்டிடத்தில் 17 வயது சிறுவன் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக மேலும் இருவர் கைது செய்யப்பட்டு, கொலைக் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கடந்த ஆகஸ்ட் 25ஆம் தேதி பிற்பகல் 2.30 மணியளவில் பிரென்ட் சிவிக் சென்டரில் சிறுவன் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு அவசர மருத்துவப் பணியாளர்கள் விரைந்து சென்ற போதிலும், அவர்களின் முயற்சிகள் பலனளிக்காமல் 17 வயதான டேவிட் வின்டர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக ஆகஸ்ட் 27ஆம் தேதி சட்ட காரணங்களால் பெயர் வெளியிட முடியாத 15 வயது சிறுவன் ஒருவர் டேவிட் வின்டரின் கொலை தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தார்.
இந்நிலையில், மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வெம்ப்லியில் உள்ள Preston Road பகுதியைச் சேர்ந்த 18 வயதான Jahquarn St Hillaire மற்றும் சட்ட காரணங்களால் பெயர் வெளியிட முடியாத வெம்ப்லி பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகியோர் ஆகஸ்ட் 29ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். இருவருக்கும் கொலை மற்றும் தாக்குதல் ஆயுதத்தை வைத்திருந்தமை தொடர்பான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இருவரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி Willesden Magistrates’ Court நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவதற்காக காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, NW9 பகுதியில் உள்ள Birchen Grove பகுதியைச் சேர்ந்த 20 வயதான Diego Farquharson என்பவருக்கு குற்றவாளிக்கு உதவியதாக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி Willesden Magistrates’ Court நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
விசாரணைக்கு தலைமை வகிக்கும் Detective Chief Inspector Aytac Necati, சம்பவம் நடைபெற்ற நேரத்தில் அந்தப் பகுதியில் பலர் இருந்திருக்கலாம் என்றும், அவர்களிடம் விசாரணைக்கு உதவும் காணொளிகள் அல்லது தகவல்கள் இருக்கக்கூடும் என்றும் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பான காணொளிகளை சமூக வலைத்தளங்களில் பகிர வேண்டாம் என்றும், ஏற்கனவே சில காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருவது குறித்து பொலிஸார் அறிந்துள்ளதாகவும் அவர் கூறினார். சம்பவம் தொடர்பாக தகவல் அல்லது காணொளி வைத்திருப்பவர்கள் பொலிஸாரை தொடர்புகொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதற்கிடையில், சம்பவத்தால் சமூகத்தில் ஏற்பட்டுள்ள கவலையை கருத்தில் கொண்டு, வெம்ப்லி மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் பொலிஸ் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூடுதல் ரோந்து நடவடிக்கைகள் அடுத்த சில நாட்கள் மற்றும் வாரங்களிலும் தொடரும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் 101 என்ற பொலிஸ் எண்ணைத் தொடர்புகொண்டு CAD 4032/25AUG26 என்ற குறிப்பு எண்ணை குறிப்பிடலாம். தகவல்களை இரகசியமாக Crimestoppers அமைப்பிடம் 0800 555 111 என்ற எண்ணிலும் வழங்க முடியும்.
