வான்கூவர் உணவகத்தில் கோடாரி மிரட்டல் – 29 வயது இளைஞர் கைது

வான்கூவர்

கனடாவின் வான்கூவர் நகரில் உள்ள உணவகம் ஒன்றின் முன்பு கோடாரியைக் காட்டி மக்களை அச்சுறுத்திய 29 வயது இளைஞரை வியாழக்கிழமை (வெள்ளிக்கிழமை) பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மெயின் ஸ்ட்ரீட் மற்றும் 24-வது அவென்யூ சந்திப்புக்கு அருகே அமைந்துள்ள இந்த உணவகத்தில், குறித்த சந்தேக நபர் வெளிப்புறத்தில் அமர்ந்திருந்தவர்களை நோக்கி சாப்பிடும் கரண்டிகள் மற்றும் கத்திகளை வீசியும், தட்டுகளை உடைத்தெறிந்தும் கடுமையான அச்சுறுத்தலில் ஈடுபட்டுள்ளார்.

அத்துடன், கையில் கோடாரியை வைத்துக்கொண்டு அங்கிருந்த மக்களை வெட்டிவிடுவதாக மிரட்டியதாக வான்கூவர் பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸ் குழுவினர், காவல் துறை நாய் பிரிவின் உதவியுடன் அந்த நபரை மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபர் சிறு காயமடைந்திருந்ததால், முதலில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பின்னர், நீதிமன்றில் குறிப்பிட்ட தேதியில் ஆஜராக வேண்டும் என்ற பிணை நிபந்தனையின் அடிப்படையில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை வான்கூவர் பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

© 2026 Colombo Tamil | All rights reserved | Made With By WebpressHub.net