67 பேரின் கனேடிய குடியுரிமை இடைநிறுத்தம்: காரணம் என்ன?

கனேடிய குடியுரிமை

கனடாவில் வம்சாவளி அடிப்படையிலான குடியுரிமைச் சட்ட மாற்றங்களுக்குப் பின்னர் வழங்கப்பட்ட சில குடியுரிமைச் சான்றிதழ்கள் தொடர்பில் மீளாய்வு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன் ஒரு பகுதியாக, கனேடிய புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு (IRCC), சிலருக்கு தங்களது குடியுரிமைச் சான்றிதழ்களை மீண்டும் ஒப்படைக்குமாறு கடிதம் அனுப்பியுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் Bill C-3 என அழைக்கப்படும் வம்சாவளி அடிப்படையிலான கனேடிய குடியுரிமைச் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, பலர் கனேடிய குடியுரிமைக்காக விண்ணப்பித்தனர். அதில் ஆயிரக்கணக்கானோருக்கு குடியுரிமைச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இந்நிலையில், வழங்கப்பட்ட சில குடியுரிமைச் சான்றிதழ்களுக்கான ஆதார ஆவணங்கள் தொடர்பில் மேலதிக சரிபார்ப்பு தேவைப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுவரை குடியுரிமைச் சான்றிதழ்களை ஒப்படைக்குமாறு அறிவிக்கப்பட்டவர்களில் 67 பேரின் கனேடிய குடியுரிமை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

குறித்த நபர்கள் தாங்கள் கனேடிய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்பதை நிரூபிக்க சமர்ப்பித்த ஆவணங்கள் போதுமானதாக இல்லை என தெரியவந்துள்ளதே இதற்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், ஆரம்ப கட்டத்தில் அந்த ஆவணங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதற்கான காரணம் குறித்தும் கேள்விகள் எழுந்துள்ளன. அதிகாரிகளுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆவணங்கள் தொடர்பில் தெளிவான வழிகாட்டுதல்கள் இல்லாததால் குழப்ப நிலை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

தற்போது 67 பேரின் குடியுரிமை தொடர்பான விடயங்கள் மீளாய்வு செய்யப்பட்டு வருகின்றன. இறுதி முடிவு அதிகாரப்பூர்வ விசாரணைகளின் பின்னர் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

© 2026 Colombo Tamil | All rights reserved | Made With By WebpressHub.net