வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பேரழிவுக்கு மத்தியில், இடிபாடுகளின் அருகே கர்ப்பிணி ஒருவர் ஆண் குழந்தையை பெற்றெடுத்த சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
வெனிசுலாவில் கடந்த புதன்கிழமை மாலை குறுகிய இடைவெளியில் அடுத்தடுத்து இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. ஒரு நூற்றாண்டில் இல்லாத அளவுக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கங்களால் வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் பல்வேறு கட்டிடங்கள் கடுமையாக சேதமடைந்தன.
முதலில் 7.1 ரிக்டர் அளவிலும், அதனைத் தொடர்ந்து 7.5 ரிக்டர் அளவிலும் நிலநடுக்கங்கள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் காரகாஸ் உள்ளிட்ட பல பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. பல கட்டிடங்கள் இடிந்து விழுந்த நிலையில், ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஐக்கிய நாடுகள் சபையின் மதிப்பீட்டின்படி, இந்த பேரழிவால் 67.6 லட்சம் பேர் வரை பாதிக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. முக்கிய விமான நிலையங்களும் சேதமடைந்துள்ளன. இடிபாடுகளில் பலர் சிக்கியிருக்கலாம் என்ற அச்சமும் நிலவுகிறது.
இந்த சோகமான சூழ்நிலையில், லா குவைரா நகரில் நடந்த ஒரு சம்பவம் பலரையும் நெகிழ வைத்துள்ளது.
சரிந்து கிடந்த கட்டிடங்களுக்கு அருகிலுள்ள தெருவில், டாக்டர் மரியா பெர்னான்டா தெரான் என்ற கர்ப்பிணிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. மருத்துவ உதவி கிடைப்பதற்கு முன்பே, அங்கிருந்த பொதுமக்களின் உதவியுடன் அவர் தெருவிலேயே அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.
பின்னர், அங்கிருந்தவர்கள் குழந்தையை பாதுகாப்பாக துணியால் மூடி தாயிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து தாய் மற்றும் குழந்தை மருத்துவ மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இருவரும் நலமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
“என் வாழ்க்கையின் மிகப்பெரிய சவால் இது” என டாக்டர் மரியா பெர்னான்டா தெரான் சமூக வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
பல உயிர்களை பறித்த இந்த நிலநடுக்க பேரழிவின் நடுவில், ஒரு புதிய உயிர் பிறந்த இந்த சம்பவம் நம்பிக்கையின் அடையாளமாக பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகள்




