19 ஆண்டுகள் தாமதமாக வந்த இதழ்: பிரித்தானிய தபால் சேவை ஏற்படுத்திய வியப்பூட்டும் சம்பவம்!

19 ஆண்டுகள் தாமதமாக வந்த இதழ்: பிரித்தானிய தபால் சேவை ஏற்படுத்திய வியப்பூட்டும் சம்பவம்!

பிரித்தானியாவில் 19 ஆண்டுகளுக்கு முன்பு ஆர்டர் செய்யப்பட்ட ஒரு இதழ் தற்போது அதன் உரிமையாளரிடம் வந்து சேர்ந்துள்ள சம்பவம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

செஸ்டர் பகுதியைச் சேர்ந்த 52 வயதான பால் எட்வர்ட்ஸ், 2007ஆம் ஆண்டு தனது குடும்பத்திற்காக ‘மதர் அண்ட் பேபி’ என்ற இதழுக்கு சந்தா செலுத்தியிருந்தார். அப்போது அவரது மகளுக்கு 18 மாதங்கள் வயதாக இருந்ததுடன், அவரது மகன் பிறக்க இன்னும் சில மாதங்களே இருந்தன. எனினும், அந்த இதழ் அக்காலத்தில் அவரிடம் வந்து சேரவில்லை.

இந்நிலையில், கடந்த வாரம் ஏப்ரல் 2007 திகதியிடப்பட்ட அந்த இதழ் திடீரென அவரது வீட்டிற்கு வந்து சேர்ந்துள்ளது. தற்போது அவரது பிள்ளைகள் 18 மற்றும் 20 வயதுடையவர்களாக வளர்ந்து பல்கலைக்கழகக் கல்வி கற்று வரும் நிலையில், இரண்டு தசாப்தங்களுக்கு முன்பு அனுப்பப்பட்ட இதழ் வந்து சேர்ந்தது குடும்பத்தினருக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த இதழ் கிழிந்த நிலையிலான ஓர் உறையில் வந்ததாகவும், அதனுடன் ராயல் மெயில் நிறுவனம் சார்பில் “ஏற்பட்ட சிரமத்திற்கு மனமார்ந்த மன்னிப்புக் கோருகிறோம்” என்ற குறிப்பு இணைக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எழுத்தாளரான பால் எட்வர்ட்ஸ், தனது புதிய அறிவியல் புனைகதை நூல்கள் வெளியாகும் செய்திக்காக காத்திருந்த நேரத்தில் இந்தப் பழைய இதழ் வந்து சேர்ந்தது மிகவும் வேடிக்கையான அனுபவமாக இருந்ததாக கூறியுள்ளார். “பிள்ளைகள் வளர்ந்து வீட்டை விட்டு வெளியேறிவிட்ட பிறகு, குழந்தை பராமரிப்பு இதழ் வந்து சேர்ந்து மன்னிப்பு கேட்பது உண்மையிலேயே நகைச்சுவையாக உள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து அவர் சமூக வலைத்தளமான எக்ஸ் தளத்தில் பகிர்ந்த பதிவு இணையத்தில் வேகமாகப் பரவி, சுமார் 15 லட்சம் பார்வைகளைப் பெற்றுள்ளது.

இதுகுறித்து விளக்கம் அளித்த ராயல் மெயில் நிறுவனம், அந்த இதழ் தபால் அமைப்பில் தொடர்ந்து சிக்கியிருந்ததாகத் தெரியவில்லை என்றும், யாரோ ஒருவரால் பின்னர் மீண்டும் தபால் சேவைக்குள் சேர்க்கப்பட்டிருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.

பிரித்தானிய தபால் சேவையின் தாமதங்கள் தொடர்பாக ஏற்கெனவே பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், 19 ஆண்டுகள் கழித்து வந்த இந்த இதழ் சம்பவம் சமூக ஊடகங்களில் பரவலான விவாதத்திற்கும் நகைச்சுவை கருத்துகளுக்கும் வழிவகுத்துள்ளது.

19 ஆண்டுகள் தாமதமாக வந்த இதழ்: பிரித்தானிய தபால் சேவை ஏற்படுத்திய வியப்பூட்டும் சம்பவம்!

© 2026 Colombo Tamil | All rights reserved | Made With By WebpressHub.net