வடக்கு லண்டனின் கோல்டர்ஸ் கிரீன் (Golders Green) பகுதியில் கடந்த திங்கட்கிழமை அதிகாலையில் ‘ஹட்சோலா’ (Hatzola) என்ற யூத தொண்டு நிறுவனத்திற்குச் சொந்தமான நான்கு ஆம்புலன்ஸ்கள் மர்ம நபர்களால் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
‘ஹட்சோலா’ நிறுவனம் சாதி, மத வேறுபாடின்றி அனைவருக்கும் இலவச அவசர மருத்துவச் சேவைகளை வழங்கி வரும் சூழலில், அதன் வாகனங்கள் குறிவைக்கப்பட்டிருப்பது ஒரு திட்டமிட்ட ‘யூத எதிர்ப்பு வெறுப்புக் குற்றமாக’ (Antisemitic hate crime) கருதி லண்டன் மெட்ரோபொலிட்டன் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்டதாகக் கருதப்படும் 47 மற்றும் 45 வயதுடைய இரண்டு பிரிட்டிஷ் குடிமக்களைக் காவல்துறையினர் புதன்கிழமை கைது செய்துள்ளனர். இது ஒரு முக்கிய முன்னேற்றம் என்று லண்டன் காவல் கண்காணிப்பாளர் ஜேசன் ஸ்டீவர்ட் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் இந்தத் தாக்குதலில் குறைந்தது மூன்று பேர் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. கடந்த பிப்ரவரி மாதம் இதே பகுதியில் மூன்று நபர்கள் யூத வழிபாட்டுத் தலத்தைச் சுற்றியுள்ள கதவுகளைத் திறக்க முயன்றதும், பிடிபட்டபோது தங்களுக்கு அருகில் உள்ள மசூதிக்கு வழி தெரியவில்லை என்று கூறியதும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இது தாக்குதலுக்கு முன்னதாக நடத்தப்பட்ட உளவு வேலையாக இருக்கலாம் என்று யூத சமூகத்தினர் அச்சம் தெரிவிக்கின்றனர்.
இந்தத் தாக்குதலுக்கு ‘ஹரகத் அஷாப் அல்-யமின் அல்-இஸ்லாமிய’ (Harakat Ashab al-Yamin al-Islamiya) என்ற இஸ்லாமிய அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த அமைப்பு ஐரோப்பா முழுவதும் பல்வேறு தீவைப்புச் சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாகவும், இதற்கு ஈரானுடன் தொடர்பு இருக்கலாம் என்றும் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவினர் இந்த வழக்கைக் கையில் எடுத்துள்ள நிலையில், யூதர்களின் புனிதக் காலமான ‘பாஸ்ஓவர்’ (Passover) பண்டிகையை முன்னிட்டு லண்டன் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. “யூத சமூகத்தின் பாதுகாப்பிற்கு நாங்கள் முன்னுரிமை அளிக்கிறோம்” என்று அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.
மேலும் செய்திகள்





