பிரசவப் பிரிவில் அதிர்ச்சி குற்றச்சாட்டுகள்: NHS வரலாற்றின் மிகப்பெரிய மகப்பேறு விசாரணை!

பிரசவப் பிரிவில் அதிர்ச்சி குற்றச்சாட்டுகள்: NHS வரலாற்றின் மிகப்பெரிய மகப்பேறு விசாரணை தீவிரம்

பிரித்தானியாவின் தேசிய சுகாதார சேவை (NHS) வரலாற்றிலேயே மிகப்பெரிய மகப்பேறு பராமரிப்பு விசாரணை தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த விசாரணையின் இறுதி அறிக்கை எதிர்வரும் ஜூன் 24 ஆம் திகதி வெளியிடப்பட உள்ளது.

நாட்டிங்ஹாம் பல்கலைக்கழக மருத்துவமனைகள் (NUH) அறக்கட்டளையின் கீழ் இயங்கும் மகப்பேறு பிரிவில், கர்ப்பிணிப் பெண்களைக் குறிக்க ஊழியர்கள் “FOH” (‘F’ எனும் ஒரு கெட்ட வார்த்தை. ‘O’ என்பது ‘OFF’ என்பதைக் குறிக்கிறது. ‘H’ என்பது ‘HOME’ என்பதன் சுருக்கம். அதாவது அந்தப் பெண்ணை வீட்டிற்கு அனுப்பிவிடுங்கள் என்பதைக் குறிக்கும் ஆபாசமான சுருக்கச்சொல்) போன்ற அவமதிக்கும் வார்த்தைகளைப் பயன்படுத்தியது ஆதாரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

விசாரணையின் போது வெளியாகியுள்ள தகவல்கள் பல அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. ஒரு மூத்த செவிலியர், பிரசவ வலியுடன் மருத்துவமனைக்கு வரும் பெண்களிடம் அதிக அன்பும் பரிவும் காட்ட வேண்டாம் என்றும், அப்படி நடந்துகொண்டால் அவர்கள் மீண்டும் மீண்டும் மருத்துவமனைக்கு வருவார்கள் என்றும் தனது சக ஊழியர்களிடம் கூறியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

2012 முதல் 2025 வரையிலான காலப்பகுதியில் சுமார் 2,500 குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட மகப்பேறு சேவைகள் தொடர்பாக இந்த விசாரணை முன்னெடுக்கப்படுகிறது. குறிப்பாக சிசு மரணங்கள், தாய்மார்களின் உயிரிழப்புகள் மற்றும் பிரசவத்தின் போது ஏற்பட்ட கடுமையான காயங்கள் ஆகியவை ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளன.

பெண்களை மருத்துவமனையில் அனுமதிப்பதைத் தவிர்த்து முடிந்தவரை வீட்டிலேயே வைத்திருக்க முயன்ற நடைமுறைகள் பல மோசமான விளைவுகளுக்குக் காரணமாக இருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. ஒரு சம்பவத்தில், பிரசவ வலியுடன் வந்த பெண்ணை மருத்துவமனையில் அனுமதிக்க மறுத்ததால், அவர் பின்னர் திரும்பியபோது குழந்தை உயிரிழந்திருந்ததுடன், அந்தத் தாயும் கடுமையான உடல் பாதிப்புக்குள்ளாகி வாழ்நாள் முழுவதும் சிகிச்சை பெற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஊழியர்கள் மருத்துவமனையில் நிலவிய நச்சுத்தன்மை கொண்ட பணியிட கலாச்சாரம் மற்றும் கடுமையான பணியாளர் பற்றாக்குறை குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். ஒரு செவிலியரின் சாட்சியத்தின்படி, அவசர உதவி தேவைப்பட்ட ஒரு கர்ப்பிணிப் பெண் அழைப்பு மணியை அழுத்தியபோதும், சில பொறுப்பாளர்கள் அதை கவனிக்காமல் இணையத்தில் கைப்பைகள் வாங்குவதில் ஈடுபட்டிருந்ததாக கூறப்பட்டுள்ளது.

விசாரணையின் போது இனவெறி மற்றும் பாகுபாடு தொடர்பான குற்றச்சாட்டுகளும் வெளியாகியுள்ளன. குறிப்பாக தெற்காசியப் பெண்கள் தங்களது வலியை அதிகமாகக் கூறுவார்கள் என்ற தவறான எண்ணத்தால், அவர்களின் உடல்நலக் குறைகள் அலட்சியமாக கையாளப்பட்டதாக விசாரணைக்கு தலைமை தாங்கும் டோனா ஒக்கென்டன் தெரிவித்துள்ளார்.

மேலும், மருத்துவமனையின் பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து ஊழியர்கள் தொடர்ந்து எச்சரித்தபோதும், நிர்வாகம் அவற்றை புறக்கணித்ததாகவும் கூறப்படுகிறது. கடுமையான பாதிப்புகள் மற்றும் தவறுகளை வெளிப்படுத்தாமல் மறைக்க, வழக்கமான NHS நடைமுறைகளுக்கு வெளியே தனிப்பட்ட உள்நாட்டு விசாரணை அமைப்புகள் பயன்படுத்தப்பட்டதாகவும் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தற்போதைய தலைமை நிர்வாக அதிகாரி ஆண்டனி மே, கடந்த கால தவறுகளுக்குப் பொறுப்பேற்பதாக தெரிவித்ததுடன், பாதிக்கப்பட்ட குடும்பங்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார். மேலும், மருத்துவ சேவைகளின் தரத்தையும் பாதுகாப்பையும் மேம்படுத்த தேவையான மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.

© 2026 Colombo Tamil | All rights reserved | Made With By WebpressHub.net